பழமண்ணிப் படிக்கரை

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சுந்தரர் தேவாரம்):

(1)
முன்னவன் எங்கள்பிரான், முதல் காண்பரிதாய பிரான்
சென்னியில் எங்கள்பிரான், திருநீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான், மறை நான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான், பழமண்ணிப் படிக்கரையே

(2)
அண்ட கபாலம் சென்னி அடிமேல் அலர் இட்டுநல்ல
தொண்டங்கடி பரவித் தொழுதேத்தி நின்றாடுமிடம்
வெண்திங்கள் வெண்மழுவன் விரையார் கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயஇடம் பழமண்ணிப் படிக்கரையே

(3)
ஆடுமின் அன்புடையீர், அடிக்காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர், உமரோடெமர் சூழவந்து
வாடும் இவ்வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே

(4)
அடுதலையே புரிந்தான் அவை அந்தர மூவெயிலும்
கெடுதலையே புரிந்தான், கிளருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலையே புரிந்தான், நரி கான்றிட்ட எச்சில் வெள்ளைப்
படுதலையே புரிந்தான் பழமண்ணிப் படிக்கரையே

(5)
உம்கைகளால் கூப்பி உகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்
மங்கையொர் கூறுடையான், வானோர் முதலாய பிரான்
அங்கையில் வெண்மழுவன், அலையார் கதிர் மூவிலைய
பங்கய பாதம்இடம் பழமண்ணிப் படிக்கரையே

(6)
செடிபடத் தீவிளைத்தான் சிலையார் மதில், செம்புனம்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எருதேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன் தன்னைக் கறுத்தான், கழல் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே

(7)
கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயிலாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழமண்ணிப் படிக்கரையே

(8)
திரிவன மும்மதிலும் எரித்தான், இமையோர் பெருமான்
அரியவன அட்டபுட்பம் அவை கொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் அடியும்முடி காண்பரிய
பரியவன், பாசுபதன் பழமண்ணிப் படிக்கரையே

(9)
வெற்றரைக் கற்றமணும், விரையாது விண்டாலம் உண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான் துன்னஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கருதேன்மின், படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழிபாவங்கள் தீர்மின்களே

(10)
பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணிப் படிக்கரையை
அல்லியம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லையன்றே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page