(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை
மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை
நாவலனை, நரை விடையொன்றேறுவானை
நால்வேதம் ஆறங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்துகந்தானை, அமரர் கோவை
அயன்திருமால் ஆனானை, அனலோன் போற்றும்
காவலனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(2)
தலையேந்து கையானை, என்பு ஆர்த்தானைச்
சவம்தாங்கு தோளானைச், சாம்பலானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாகம் அசைத்தானைக், குலமாம் கைலை
மலையானை, மற்றொப்பார் இல்லாதானை
மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும்
கலையானைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(3)
தொண்டர்குழாம் தொழுதேத்த அருள் செய்வானைச்
சுடர்மழுவாள் படையானைச், சுழிவான் கங்கைத்
தெண்திரைகள் பொருதிழி செஞ்சடையினானைச்
செக்கர்வான் ஒளியானைச், சேராது எண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வியெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பல்கண் கொண்ட
கண்டகனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(4)
விண்ணவனை, மேருவில்லா உடையான் தன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியானானைப்
பெண்ணவனை, ஆணவனைப், பித்தன் தன்னைப்
பிணமிடு காடுடையானைப், பெருந் தக்கோனை
எண்ணவனை, எண்திசையும் கீழும் மேலும்
இருவிசும்பும் இருநிலமுமாகித் தோன்றும்
கண்ணவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(5)
உருத்திரனை உமாபதியை உலகானானை
உத்தமனை நித்திலத்தை, ஒருவன் தன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பினானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை, நித்திலத்தின் தொத்தொப்பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(6)
ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை
இளமதியம் எருக்கு வானினிழிந்த கங்கை
சேடெறிந்த சடையானைத், தேவர் கோவைச்
செம்பொன் மால் வரையானைச், சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக், கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கிறிபேசி மடவார் பெய்வளைகள் கொள்ளும்
காடவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(7)
நாரணனும் நான்முகனும் அறியாதானை
நால்வேதத்துருவானை, நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலி கொண்டுண்ணும்
பால்வணனைத், தீவணனைப், பகலானானை
வார்பொதியும் முலையாள்ஓர் கூறன் தன்னை
மான்இடங்கை உடையானை, மலிவார் கண்டம்
கார்பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(8)
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை
மதிசூடும் பெருமானை, மறையோன் தன்னை
ஏனவனை, இமவான் தன் பேதையோடும்
இனிதிருந்த பெருமானை, ஏத்துவார்க்குத்
தேனவனைத், தித்திக்கும் பெருமான் தன்னைத்
தீதிலா மறையோனைத், தேவர் போற்றும்
கானவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(9)
நெருப்புருவத் திருமேனி வெண்ணீற்றானை
நினைப்பார்தம் நெஞ்சானை, நிறைவானானைத்
தருக்கழிய முயலகன்மேல் தாள் வைத்தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத், தக்கோர் சிந்தை
விருப்பவனை, விதியானை, வெண்ணீற்றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றும்
கருத்தவனைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
(10)
மடலாழித் தாமரை ஆயிரத்தில் ஒன்று
மலர்க்கண் இடந்திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக்கருள் செய்தானைத்
தும்பியுரி போர்த்தானைத், தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக்கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை, அருளார் கருணைக்
கடலானைக், கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந்தேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...