திருக்கண்ணார்கோயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ்புனல் சூடிப்
பெண்ஆணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கை தொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணாவாகும், நல்வினையாய நணுகும்மே
(2)
கந்தமர் சந்தும், காரகிலும், தண் கதிர்முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி வளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர் சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடும் சீர்திகழ் கண்ணார் கோயிலே
(3)
பல்லியல் பாணிப் பாரிடமேத்தப் படுகானில்
எல்லிநடஞ்செய் ஈசன் எம்மான்தன் இடமென்பர்
கொல்லையில் முல்லை மல்லிகை மௌவல் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர் கண்ணார் கோயிலே
(4)
தருவளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்சஉரித்து, மறைநால்வர்க்கு
உருவளர் ஆலநீழல் அமர்ந்தீங்குரை செய்தார்
கருவளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே
(5)
மறுமாண் உருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலி பால்சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே
(6)
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத், தேவர்க்கமுதீந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக், கண்ணார் திகழ்கோயில் கனிதன்னை
நண்ண வல்லோர்கட்கில்லை நமன்பால் நடலையே
(7)
முன்னொரு காலத்து இந்திரனுற்ற முனிசாபம்
பின்னொரு நாள்அவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளால் கண்ணாயிரம் ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே
(8)
பெருக்கெண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத் தன்னீள் கழல் நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர் வாள்தேர் முன்ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே
(9)
செங்கமலப்போதில் திகழ் செல்வன், திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும் வண்ணத் தழலானான்
தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோடேத்திட அண்டத்தமர்வாரே
(10)
தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும், தாமுண்ணும்
சோறுடையார் சொல் தேறல்மின், வெண்ணூல்சேர் மார்பன்
ஏறுடையன், பரன், என்பணிவான், நீள் சடைமேலோர்
ஆறுடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே
(11)
காமரு கண்ணார் கோயில்உளானைக், கடல்சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மையுண் ஞானசம்பந்தன்
பாமருபாடல் பத்தும் வல்லார் மேல் பழிபோமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page