சீகாழி – சுந்தரர் தேவாரம்:

(1)
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
    தன்னருள் தந்தஎம் தலைவனை, மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
    வருபுனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
    எண்வகை ஒருவனை, எங்கள் பிரானைக்
காதில்வெண் குழையனைக், கடல்கொள மிதந்த
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(2)
மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன்
    வருந்தலுற்றேன், மறவா வரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன்
    துணையென்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
    முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(3)
திருத்தினை நகருறை சேந்தன்அப்பன், என்
    செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை, அம்பொன்
ஒருத்தனை அல்லதிங்காரையும் உணரேன்
    உணர்வு பெற்றேன் உய்யுங் காரணந் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
    விழித்தெங்குங் காணமாட்டாது விட்டிருந்தேன்
கருத்தனை, நிருத்தஞ்செய் காலனை, வேலைக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(4)
மழைக்கரும்பும் மலர்க் கொன்றையினானை
    வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன்
பிழைத்தொரு கால் இனிப்போய்ப் பிறவாமைப்
    பெருமை பெற்றேன், பெற்றதார் பெறுகிற்பார்
குழைக்கருங் கண்டனைக் கண்டு கொள்வானே
    பாடுகின்றேன், சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும்புங் கதலிப்பல சோலைக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(5)
குண்டலங் குழைதிகழ் காதனே என்றும்
    கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம்பும் மலர்க் கொன்றையன் என்றும்
    வாய் வெருவித் தொழுதேன் விதியாலே
பண்டைநம் பலமனமுங் களைந்து ஒன்றாய்ப்
    பசுபதி பதி வினவிப் பலநாளும்
கண்டலங் கழிக்கரை ஓதம் வந்துலவும்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(6)
வரும்பெரு வல்வினை என்றிருந்தெண்ணி
    வருந்தலுற்றேன், மறவா மனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய் குளிர்ப்பெய்தி
    வேண்டி நின்றேன் தொழுதேன் விதியாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
    ஐயனை, அறவன்என் பிறவிவேர் அறுக்கும்
கரும்பினைப், பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(7)
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
    அன்பர்கள் சாயலுள் அடையல் உற்றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
    படுமென மொழிந்தவர் வழி முழுதெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னினதொளியை
    மின்னினதுருவினை என்னிடைப் பொருளைக்
கயலினஞ் சேலொடு வயல்விளையாடுங்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(8)
நினைதரு பாவங்கள் நாசங்களாக
    நினைந்துமுன் தொழுதெழப்பட்ட ஒண்சுடரை
மனைதரு மலைமகள் கணவனை, வானோர்
    மாமணி மாணிக்கத்தை, மறைப் பொருளைப்
புனைதரு புகழினை, எங்களதொளியை
    இருவரும் ஒருவனென்றுணர்வரியவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம் வந்துலவும்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(9)
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
    வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துளதாக வைத்துய்த்த
    துன்மையெனுந் தகவின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை, எங்கள் பிரானைப்
    பேரருளாளனைக், காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை, அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(10)
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
    விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டு
அழுமலர்க் கண்ணிணை அடியவர்க்கல்லால்
    அறிவரிதவன் திருவடியிணை இரண்டும்
கழுமல வளநகர்க் கண்டு கொண்டூரன்
    சடையன்தன் காதலன் பாடிய பத்தும்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
    துன்பமும் இடும்பையுஞ் சூழகிலாவே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page