(1)
திருவும் வண்மையும் திண்திறல் அரசும்
சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான் தனக்களித்த
வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னி வந்துந்து பன்மணியைப்
பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றித்
திரட்டும் தென்திரு நின்றியூரானே
(2)
அணிகொள் ஆடையம், பூணணி மாலை
அமுது செய்து அமுதம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
காதல் இன்னருள் ஆதரித்தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும்
செல்வத் தென்திரு நின்றியூரானே
.
(3)
மொய்த்த சீர் முந்நூற்றறுபது வேலி
மூன்று நூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்றுனக்கு அளிப்பப்
பத்தி செய் தவப் பரசுராமற்குப்
பாதம் காட்டிய நீதிகண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும்
செல்வத் தென்திரு நின்றியூ ரானே
(4)
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
எழுந்து தன்முலைக் கலசங்களேந்திச்
சுரபி பால் சொரிந்தாட்டி நின் பாதம்
தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கி வன்பாசத்தை அறுத்துப்
பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
அளிக்கும் தென்திரு நின்றியூரானே
(5)
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
வான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ்சு அகத்தியன் தனக்குச்
சிந்து மாமணியணி திருப்பொதியில்
சேர்வு நல்கிய செல்வம்கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும்
செல்வத் தென்திரு நின்றியூரானே
(6)
காது பொத்தரைக் கின்னரர், உழுவை
கடிக்கும் பன்னகம், பிடிப்பரும் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழல் கீழ்அறம் பகர
வேதம் செய்தவர் எய்திய இன்பம்
யானும் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
நிலவு தென்திரு நின்றியூரானே
(7)
கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
நலங்கொள் பாதம் நின்றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
நிலவு தென்திரு நின்றியூரானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...