சேய்ஞலூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே
(2)
நீறடைந்த மேனியின்கண் நேரிழையாள் ஒருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி அரவம் அணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே
(3)
ஊனடைந்த வெண்தலையினோடு பலிதிரிந்து
கானடைந்த பேய்களோடு பூதம் கலந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி ஆடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே
(4)
வீணடைந்த மும்மதிலும் வில்மலையா, அரவின்
நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி ஊட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே
(5)
பேயடைந்த காடிடமாப் பேணுவதன்றியும் போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே
வாயடைந்த நான்மறை ஆறங்கமோடு ஐவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே
(6)
காடடைந்த ஏனமொன்றின் காரணமாகி வந்து
வேடடைந்த வேடனாகி விசயனொடு எய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்
சேடடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே
(7)
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்தாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் தனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே
(8)
மாவடைந்த தேரரக்கன் வலி தொலைவித்தவன் தன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போல் பூசுரர் போற்றி செய்யும்
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே
(9)
காரடைந்த வண்ணனோடு, கனகம்அனையானும்
பாரடைந்தும் விண்பறந்தும் பாதமுடி காணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகில் சேய்ஞலூர் மேயவனே
(10)
மாசடைந்த மேனியாரும், மனம்திரியாத கஞ்சி
நேசடைந்த ஊணினாரும் நேசமிலாததென்னே
வீசடைந்த தோகையாட, விரைகமழும் பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடும் சேய்ஞலூர் மேயவனே
(11)
சேயடைந்த சேய்ஞலூரில் செல்வன் சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபுரத் தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுலகு ஆள்பவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page