கீழைத்திருக்காட்டுப்பள்ளி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
செய்யருகே புனல்பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சில மலர்த்தேன்
கையருகே கனி வாழையீன்று கானலெல்லாம் கமழ் காட்டுப்பள்ளிப்
பையருகே அழல்வாய ஐவாய்ப் பாம்பணையான் பணைத்தோளி பாகம்
மெய்யருகே உடையானை, உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே
(2)
(3)
திரைகள் எல்லாம் அலரும் சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகள் எல்லாம் அணி சேர்ந்து உரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகள் எல்லாம் உணர்வெய்தி நல்ல உத்தமராய் உயர்ந்தார் உலகில்
அரவமெல்லாம் அரையார்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே
(4)
தோலுடையான்; வண்ணப் போர்வையினான்; சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடையான்; இமையோர் பெருமான்; நுண்ணறிவால் வழிபாடு செய்யும்
காலுடையான்; கரிதாய கண்டன்; காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
மேலுடையான்; இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே
(5)
சலசல சந்தகிலோடு முந்திச் சந்தனமே கரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை ஆர்த்துமண்டிப் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின் வாய்க்
கலகல நின்ற திருங்கழலான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்கள் ஏத்தநின்ற சூலம் வல்லான் கழல் சொல்லுவோமே
(6)
தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாம்
களைஅவிழும் குழலார் கடியக் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளித்
துளை பயிலும் குழலியாழ் முரலத் துன்னிய இன்னிசையால் துதைந்த
அளைபயில் பாம்பரை ஆர்த்த செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாமே
(7)
முடி கையினால் தொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான், கரிதாய கண்டன்
பொடியணி மேனியினானை உள்கிப் போதொடு நீர்சுமந்தேத்தி முன்னின்று
அடி கையினால் தொழவல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே
(8)
பிறையுடையான்; பெரியோர்கள் பெம்மான்; பெய்கழல் நாள்தொறும் பேணியேத்த
மறையுடையான்; மழு வாளுடையான்; வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடையான்; கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன்; காட்டுப்பள்ளிக்
குறையுடையான்; குறள் பூதச்செல்வன் குரைகழலே கைகள் கூப்பினோமே
(9)
செற்றவர் தம்அரணம் அவற்றைச் செவ்வழல்வாய் எரியூட்டி நின்றும்
கற்றவர் தாம் தொழுதேத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
உற்றவர் தாம் உணர்வெய்தி நல்ல உம்பருள்ளார் தொழுதேத்த நின்ற
பெற்றமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே
(10)
ஒண்துவரார் துகிலாடை மெய் போர்த்து, உச்சி கொளாமை உண்டே உரைக்கும்
குண்டர்களோடு அரைக் கூறையில்லார் கூறுவதாம் குணமல்ல கண்டீர்
அண்ட மறையவன் மாலும் காணா ஆதியினான்உறை காட்டுப்பள்ளி
வண்டமரும் மலர்க் கொன்றைமாலை வார்சடையான் கழல் வாழ்த்துவோமே
(11)
பொன்னியல் தாமரை நீலநெய்தல் போதுகளால் பொலிவெய்து பொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதலனைக் கடற்காழியர்கோன்
துன்னிய இன்னிசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன் நல்ல
தன்னிசையால் சொன்ன மாலை பத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page