கடையவனேனைக் கருணையினாற் கலந்தாண்டு கொண்ட
விடையவனே – விட்டிடுதி கண்டாய், விறல் வேங்கையின் தோல்
உடையவனே, மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே,
சடையவனே, தளர்ந்தேன், எம்பிரான் என்னைத் தாங்கிக் கொள்ளே
(2)
கொள்ளேர் பிளவகலாத் தடங் கொங்கையர் கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய், நின் விழுத்தொழும்பின்
உள்ளேன் – புறமல்லேன் – உத்தரகோச மங்கைக்கரசே,
கள்ளேன் ஒழியவுங் கண்டு கொண்டாண்ட(து) எக்காரணமே?
(3)
காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங்கரை மரமாய்
வேருறுவேனை விடுதி கண்டாய், விளங்குந் !திருவா
ரூர்உறைவாய், மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
வாருறு பூண்முலையாள் பங்க – என்னை வளர்ப்பவனே
(4)
வளர்கின்ற நின்கருணைக் கையில் வாங்கவும் நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய், வெண்மதிக் !கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தரகோச மங்கைக்கரசே
தெளிகின்ற பொன்னு மின்னும் மன்ன – தோற்றச் செழுஞ்சுடரே
(5)
செழிகின்ற தீப்புகு விட்டிலிற் சின்மொழியாரிற் பன்னாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய், வெறிவாய் அறுகால்
உழுகின்ற பூமுடி உத்தரகோச மங்கைக்கரசே
வழிநின்று நின்னருளார் அமுதூட்ட மறுத்தனனே
(6)
மறுத்தனன் யான்உன் அருள் அறியாமையின் என்மணியே
வெறுத்தெனை நீ விட்டிடுதி கண்டாய், வினையின் தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கரசே
பொறுப்பர்அன்றே பெரியோர் சிறு நாய்கள்தம் பொய்யினையே
(7)
பொய்யவனேனைப் பொருளென ஆண்டொன்று பொத்திக் கொண்ட
மெய்யவனே – விட்டிடுதி கண்டாய், விடமுண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
செய்யவனே – சிவனே- சிறியேன் பவந் தீர்ப்பவனே
(8)
தீர்க்கின்றவாறென் பிழையைநின் சீரருள் என்கொல்என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய், விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார்விடை உத்தரகோச மங்கைக்கரசே
ஈர்க்கின்ற அஞ்சொடச்சம் வினையேனை இருதலையே
(9)
இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய், வியன் !மூவுலகுக்
கொரு தலைவா, மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
பொருதலை மூவிலைவேல் வலன்ஏந்திப் பொலிபவனே
(10)
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்றாக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் – அளிதேர் விளரி
ஒலிநின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கரசே
வலிநின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே
(11)
மாறுபட்(டு)அஞ்சென்னை வஞ்சிப்ப யான்உன் மணி மலர்த்தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய், வினையேன் மனத்தே
ஊறுமட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன்மேனி நெடுந்தகையே
(12)
நெடுந்தகை நீஎன்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு
விடுந் தகையேனை விடுதி கண்டாய், விரவார் வெருவ
அடுந்தகை வேல்வல்ல உத்தரகோச மங்கைக்கரசே
கடுந்தகையேன் உண்ணுந் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே
(13)
கடலினுள் நாய் நக்கியாங்குன் கருணைக் கடலின் உள்ளம்
விடலரியேனை விடுதி கண்டாய், விடலில் அடியார்
உடல்இலமே மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மதுவெள்ளமே
(14)
வெள்ளத்துள் நாவற்றியாங்குன் அருள்பெற்றுத் துன்பத்தின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய், விரும்பும் அடியார்
உள்ளத்துள்ளாய் – மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
கள்ளத்துளேற்கருளாய் களியாத களியெனக்கே
(15)
களிவந்த சிந்தையொடுன் கழல் கண்டுங் கலந்தருள
வெளிவந்திலேனை விடுதி கண்டாய், மெய்ச் சுடருக்கெல்லாம்
ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைக்கரசே
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடைய என்அப்பனே
(16)
என்னை – அப்பா – அஞ்சல் என்பவர் இன்றி நின்றெய்த்தலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய், உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் – மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
அன்னைஒப்பாய் – எனக்கத்தன் ஒப்பாய் – என் அரும்பொருளே
(17)
பொருளே, தமியேன் புகலிடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே எனைவிட்டிடுதி கண்டாய், மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணிபொழில் உத்தரகோச மங்கைக்கரசே
இருளே – வெளியே – இகபரமாகி இருந்தவனே
(18)
இருந்தென்னை ஆண்டுகொள் – விற்றுக்கொள் – ஒற்றிவை என்னின்அல்லால்
விருந்தினனேனை விடுதி கண்டாய், மிக்க நஞ்சமுதா
அருந்தினனே – மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
மருந்தினனே பிறவிப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே
(19)
மடங்கஎன் வல்வினைக் காட்டைநின் மன்னருள் தீக்கொளுவும்
விடங்க என்றன்னை விடுதி கண்டாய், என் பிறவியை !வே
ரொடுங் களைந்தாண்டு கொள், உத்தரகோச மங்கைக்கரசே
கொடுங் கரிக்குன்றுரித்(து) அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே
(20)
கொம்பரில்லாக் கொடிபோல் அலமந்தனன் கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய், விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள்ளாய் – மன்னும் உத்தரகோச மங்கைக்கரசே
அம்பரமே நிலனே அனல் காலொ(டு) அப்பானவனே
(21)
ஆனை வெம்போரிற் குறுந்தூறெனப் புலனால் !அலைப்புண்
டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய், வினையேன் மனத்துத்
தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் !ஓத்
தூனையும் என்பினையும் உருக்கா நின்ற ஒண்மையனே
(22)
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்தொளி மிளிரும்
வெண்மையனே – விட்டிடுதி கண்டாய், மெய் !அடியவர்கட்
கண்மையனே, என்றுஞ் சேயாய், பிறற்கறிதற்கரிதாம் பெண்மையனே, தொன்மை
ஆண்மையனே அலிப் பெற்றியனே
(23)
பெற்றது கொண்டு பிழையே பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்றடியேனை விடுதி கண்டாய், விடிலோ கெடுவேன்
மற்றடியேன் தன்னைத் தாங்குநர் இல்லை – என் வாழ்முதலே
உற்றடியேன் மிகத்தேறி நின்றேன் எனக்குள்ளவனே
(24)
உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய், வியன் மாத்தடக்கைப்
பொள்ளனல் வேழத்துரியாய் புலன் நின்கட் போதலொட்டா
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க்குடந் தன்னை எறும்பெனவே
(25)
எறும்பிடை நாங்கூழெனப் புலனால் அரிப்புண்டலந்த
வெறுந் தமியேனை விடுதி கண்டாய், வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவையே உணர்வுற்றவர் உம்பரும்பர்
பெறும் பதமே அடியார் பெயராத பெருமையனே
(26)
பெருநீரறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப்பிரிந்து
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய், வியன் கங்கை பொங்கி
வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் – வெள்ளைக்
குருநீர் மதிபொதியுஞ் சடை வானக் கொழுமணியே
(27)
கொழுமணியேர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்றுகுன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய், மெய்ம் முழுதுங் !கம்பித்
தழும் அடியாரிடை ஆர்த்து வைத்தாட் கொண்டருளி என்னைக்
கழுமணியே – இன்னுங் காட்டுகண்டாய் நின் புலன்கழலே
(28)
புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்திங்கொர் பொய்ந்நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய், விண்ணும் மண்ணுமெல்லாங்
கலங்க முந்நீர் நஞ்சமுது செய்தாய் கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன், உடையாய் – என் தொழுகுலமே
(29)
குலங் களைந்தாய், களைந்தாய் என்னைக் குற்றங், கொற்றச்சிலையாம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய், பொன்னின் மின்னு கொன்றை
அலங்கலந் தாமரைமேனி அப்பா – ஒப்பிலாதவனே
மலங் களைந்தாற் சுழல்வன் தயிரிற் பொரு மத்துறவே
(30)
மத்துறு தண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி
வித்துறுவேனை விடுதி கண்டாய், வெண்டலை மிலைச்சிக்
கொத்துறு போது மிலைந்து குடர் நெடுமாலை சுற்றித்
தத்துறு நீறுடன் ஆரச்செஞ் சாந்தணி சச்சையனே
(31)
சச்சையனே, மிக்க தண்புனல் விண்கால் நிலம்நெருப்பாம்
விச்சையனே – விட்டிடுதி கண்டாய், வெளியாய் கரியாய்
பச்சையனே, செய்ய மேனியனே, ஒண்பட அரவக்
கச்சையனே, கடந்தாய் தடந்தாள அடற்கரியே
(32)
அடற்கரி போல் ஐம்புலன்களுக்கஞ்சி அழிந்த என்னை
விடற்கரியாய் – விட்டிடுதி கண்டாய், விழுத்தொண்டர்க்கல்லால்
தொடற்கரியாய், சுடர் மாமணியே, சுடு தீச்சுழலக்
கடற்கரிதாய் எழு நஞ்சமுதாக்குங் கறைக்கண்டனே
(33)
கண்டது செய்து கருணைமட்டுப் பருகிக் களித்து
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய், நின் விரைமலர்த்தாள்
பண்டு தந்தாற்போற் பணித்துப் பணிசெயக் கூவித்தென்னைக்
கொண்டென் எந்தாய், களையாய் களையாய் குதுகுதுப்பே
(34)
குதுகுதுப்பின்றி நின்றென் குறிப்பே செய்து – நின்குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய், விரையார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங் !கனிவித்
தெதிர்வதெப்போது? பயில்விக் கயிலைப் பரம்பரனே
(35)
பரம்பரனே நின் பழஅடியாரொடும் என் படிறு
விரும்பரனே – விட்டிடுதி கண்டாய், மென் முயற்கறையின்
அரும்பர நேர் வைத்தணிந்தாய் – பிறவி ஐவாய்அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம் அஞ்சிப் பொதும்புறவே
(36)
பொதும்புறு தீப்போற், புகைந்தெரியப் புலன் தீக்கதுவ
வெதும்புறுவேனை விடுதி கண்டாய், விரையார் நறவந்
ததும்பு மந்தாரத்தில் தாரம் பயின்று மந்தம் முரல் !வண்
டதும்புங் கொழுந்தேன் அவிர்சடை வானத்தடல்அரைசே
(37)
அரைசே அறியாச் சிறியேன் பிழைக்கஞ்சல் என்னின்அல்லால்
விரைசேர் முடியாய் விடுதி கண்டாய், வெண் நகைக் கருங்கண்
திரைசேர் மடந்தை மணந்த திருப்பொற்பதப் புயங்கா
வரை சேர்ந்தடர்ந்தென்ன வல்வினை தான் வந்தடர்வனவே
(38)
அடர் புலனால்நிற் பிரிந்தஞ்சி – அஞ்சொல் நல்லார் அவர்தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய், விரிந்தே எரியுஞ்
சுடரனையாய் – சுடுகாட்டரசே – தொழும்பர்க்கமுதே
தொடர்வரியாய் – தமியேன் தனி நீக்குந் தனித்துணையே
(39)
தனித்துணை நீநிற்க யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய், வினையேனுடைய
மனத்துணையே, என்றன் வாழ்முதலே, எனக்கெய்ப்பில் வைப்பே
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண்வலையே
(40)
வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்தலைந்தேனை விடுதி கண்டாய், வெண் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயமென்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ்முதலே
(41)
முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய், விடக்கூன் மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன், சிவனே முறையோ முறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங்கா – என் சிவகதியே
(42)
கதியடியேற்குன் கழல் தந்தருளவும் – ஊன்கழியா
விதியடியேனை விடுதி கண்டாய், வெண்டலை முழையிற்
பதியுடை வாளரப் பார்த்(து) – இறைபைத்துச் சுருங்க – அஞ்சி
மதிநெடு நீரிற் குளித்தொளிக்குஞ் சடை மன்னவனே
(43)
மன்னவனே ஒன்றுமாறறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய், மிக்க வேத மெய்ந்நூல்
சொன்னவனே, சொற்கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம்முழுதையுமே
(44)
முழுதயில் வேற்கண்ணியரெனும் மூரித் தழல்முழுகும்
விழுதனையேனை விடுதி கண்டாய், நின் வெறிமலர்த்தாள்
தொழுது செல்வான் நற்றொழும்பரிற் கூட்டிடு சோத்தெம்பிரான்
பழுதுசெய்வேனை விடேல், உடையாய், உன்னைப் பாடுவனே
(45)
பாடிற்றிலேன், பணியேன், மணிநீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய், வியந்தாங்கலறித்
தேடிற்றிலேன், சிவன் எவ்விடத்தான் – எவர் கண்டனர் !என்
றோடிற்றிலேன், கிடந்துள்ளுருகேன், நின்றுழைத்தனனே
(46)
உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத் தீயினொப்பாய்
விழைதருவேனை விடுதி கண்டாய், விடின் வேலை நஞ்சுண்
மழைதரு கண்டன், குணமிலி, மானிடன், தேய்மதியன்
பழைதரு மாபரன் என்றென்றறைவன் பழிப்பினையே
(47)
பழிப்பில் நின்பாதப் பழந்தொழும்பெய்தி – விழப்பழித்து
விழித்திருந்தேனை விடுதி கண்டாய், வெண் மணிப்பணிலங்
கொழித்து மந்தாரம் மந்தாகினி நுந்தும் பந்தப்பெருமை
தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே
(48)
தாரகை போலுந் தலைத் தலைமாலைத் தழலரப் பூண்
வீர – என்றன்னை விடுதி கண்டாய், விடில் ‘என்னை மிக்கார்
ஆர்அடியான் என்னின்?’ ‘உத்தரகோச மங்கைக்கரசின்
சீரடியார் அடியான்’ என்று நின்னைச் சிரிப்பிப்பனே
(49)
சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையும் ஈசற்கென்று
விரிப்பிப்பன் என்னை விடுதிகண்டாய், விடின் வெங்கரியின்
உரிப்பிச்சன், தோலுடைப் பிச்சன், நஞ்சூண் பிச்சன், ஊர்ச் !சுடுகாட்
டெரிப்பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன் என்றேசுவனே
(50)
ஏசினும் யான்உன்னை ஏத்தினும் – என்பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய், செம்பவள வெற்பின்
தேசுடையாய், என்னை ஆளுடையாய், சிற்றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண்டாய் அமுதுண்ணக், கடையவனே
