கோயில் திருப்பதிகம்

<– திருவாசகம்

(1)
மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழியடைத்தமுதே
ஊறி நின்றென்னுள் எழு பரஞ்சோதி
உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே, சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே, என்னுடைய அன்பே

(2)
அன்பினால் அடியேன் ஆவியோடாக்கை
ஆனந்தமாய்க் கசிந்துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யான் இதற்கிலன் ஓர் கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே – முடிவிலா முதலே
தென் பெருந்துறையாய் – சிவபெருமானே
சீருடைச் சிவபுரத்தரைசே

(3)
அரைசனே, அன்பர்க்கடியனேனுடைய
அப்பனே, ஆவியோடாக்கை
புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கிப்
பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண் கடலே
திருப்பெருந்துறையுறை சிவனே
உரையுணர்விறந்து நின்றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமாறுணர்த்தே

(4)
உணர்ந்தமா முனிவர் உம்பரோடொழிந்தார்
உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி, எல்லா உயிர்கட்கும் உயிரே
எனைப் பிறப்பறுக்கும் எம் மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே
திருப்பெருந்துறையுறை சிவனே
குணங்கள்தாம் இல்லா இன்பமே, உன்னைக்
குறிகினேற்கினி என்ன குறையே

(5)
குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந்துறையுறை சிவனே
இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக்கேனே

(6)
இரந்திரந்துருக என் மனத்துள்ளே
எழுகின்ற சோதியே, இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய்
திருப்பெருந்துறையுறை சிவனே
நிரந்த ஆகாயம் நீர்நிலம் தீகாலாய்
அவைஅல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே, களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டு கொண்டின்றே

(7)
இன்றெனக்கருளி இருள் !கடிந்துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிது மற்றின்மை
சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம்
திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்றும் நீஅல்லைஅன்றி ஒன்றில்லை
யாருன்னை அறியகிற்பாரே

(8)
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே, நினைவதேல் அரிய
நின்மலா, நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந்துறையுறை சிவனே
யார்உறவெனக்கிங்(கு)? ஆர் அயலுள்ளார்?
ஆனந்தமாக்கும் என் சோதீ

(9)
சோதியாய்த் தோன்றும் உருவமே, அருவாம்
ஒருவனே, சொல்லுதற்கரிய
ஆதியே நடுவே அந்தமே, பந்தம்
அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
வந்துநின் இணையடி தந்தே

(10)
தந்த(து) உன்றன்னைக் கொண்ட(து)என்றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்?
அந்தம்ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்ற(து)என்றென்பால்?
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
யான் இதற்கிலன் ஓர் கைம்மாறே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page