(1)
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன்தன் ஆருயிர்அதனை
வவ்வினாய்க்கு உந்தன் வன்மை கண்டுஅடியேன்
எந்தை நீஎனை நமன்தமர் நலியில்
இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(2)
வையக முற்று மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க,மற்றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(3)
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்தாட்டக்
கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
சடைமிசை மலர் அருள்செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொழில் திருப்புன்கூர் உளானே
(4)
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்திரள் மணிக்கமலங்கள் மலரும்
பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே
(5)
கோல மால்வரை மத்தென நாட்டிக்
கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆலநஞ்சு கண்டவர் மிக இரிய
அமரர்கட்கு அருள் புரிவது கருதி
நீலமார் கடல் விடந்தனை உண்டு
கண்டத்தே வைத்த பித்தநீ செய்த
சீலம் கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(6)
இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கமில் புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவரெல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடியதனை
அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(7)
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
பொழில் கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் !கொடுத்
தருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே நிந்தன் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
(8)
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
ஒருவன் நீகரிகாடு அரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமுழா முழக்க அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன்
செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(9)
அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து
அவ்வவர்க்கு அங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
(10)
கம்ப மால்களிற்றின் உரியானைக்
காமற் காய்ந்ததோர் கண்ணுடையானைச்
செம்பொனே ஒக்கும் திருவுருவானைச்
செழும் பொழில் திருப்புன்கூர் உளானை
உம்பராளியை, உமையவள் கோனை
ஊரன் வன்தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
ஐந்தும் வல்லவர் அருவினை இலரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...