திருஅண்டப் பகுதி

<– திருவாசகம்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்

சிறியவாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து

எறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன், முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள், திருத்தகும்
அறுவகைச் சமயத்தறு வகையோர்க்கும்
வீடுபேறாய் நின்ற, விண்ணோர் பகுதி
கீடம் புரையுங் கிழவோன், நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன், திருத்தகு

மதியின் தண்மை வைத்தோன், திண்திறல்
தீயின் வெம்மை செய்தோன், பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன், மேதகு
காலின் ஊக்கங் கண்டோன், நிழல்திகழ்
நீரின் இன்சுவை நிகழ்ந்தோன், வெளிப்பட

மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத்தவ்வயின் அடைத்தோன், அஃதான்று
முன்னோன் காண்க, முழுதோன் காண்க
தன்னேரில்லோன் தானே காண்க

ஏனத்தொல் எயிறணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க, நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க, அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க

அன்னதொன்றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க, பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க, அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவிஎப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் உணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க

தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க

புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண்டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க

பரமானந்தப் பழங் கடலதுவே
கருமா முகிலின் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையிலேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய

வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாலொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து
முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்
பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற ஓங்கி
இருமுச் சமயத்தொரு பேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம்

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்காதசைந்தன
ஆயிடை வானப் பேரியாற்றகவயின்
பாய்ந்தெழுந்தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரை பொருதலைத்திடித்து

ஊழூழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர் பறித்தெழுந்து
உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி, நிறையகில்

மாப்புகைக் கறை சேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டுத்
தொண்ட உழவராரத் தந்த
அண்டத்தரும்பெறல் மேகன் வாழ்க

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க்கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க

எய்தினர்க்காரமுதளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத்தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க்கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க்கெய்ப்பினில் வைப்பு வாழ்க

நச்சரவாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை
நடப்பன நடாய்க் – கிடப்பன கிடாய்
நிற்பன நிறீஇச்

சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும் படான்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந்தெங்கும்

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக்கெளி வந்தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக்கெளி வந்திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி

ஊற்றிருந்துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவால் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத்

திசைமுகன் சென்று தேடினர்க்கொளித்தும்
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உறைப்பவர்க்கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கொளித்தும்

இத்தந்திரத்திற் காண்டும் !என்றிருந்தோர்க்
கத் தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாணுதற் பெண்ணென ஒளித்தும், சேண்வயின்

ஐம்புலன் செல விடுத்தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண்டில்லை என்றறிவொளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்

ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்
தாள்தளை இடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற்றொளித்தும்

தன்னேர் இல்லோன் தானேயான தன்மை
என்னேர் அனையோர் கேட்க வந்தியம்பி
அறைகூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலங் காட்டி அருளலும்
உளையா அன்பென்புருக ஓலமிட்டு

அலைகடல் திரையின் ஆர்த்தார்த்தோங்கித்
தலை தடுமாறா வீழ்ந்து புரண்டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி தேற்றாத் தடப்பெரு மதத்தின்

ஆற்றேனாக அவயவஞ் சுவைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்
வீழ்வித்தாங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவதறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு

அருளியதறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்லகில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந்தமுதம் மயிர்க்கால் தோறும்

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பை கொண்டின் தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் !உருகுவ

துள்ளங் கொண்டோர் உருச் செய்தாங்கெனக்
கள்ளூறாக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்பதாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க

அருளொடு பராவமுதாக்கினன்
பிரமன் மாலறியாப் பெற்றியோனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page