முத்துநல் தாமம்பூ மாலை தூக்கி
முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண்டிசைமின்
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(2)
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்
மாவின் வடுவகிரன்ன கண்ணீர்
வம்மின்கள், வந்துடன் பாடுமின்கள்
கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின் எங்கோன் எங்கூத்தன்
தேவியுங் தானும் வந்தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே
(3)
சுந்தர நீறணிந்தும் மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி
இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
அந்தரர்கோன் – அயன் தன் பெருமான்
ஆழியான் நாதன் – நல்வேலன் தாதை
எந்தரம் ஆள் உமையாள் !கொழுநற்
கேய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(4)
காசணிமின்கள் உலக்கை எல்லாங்
காம்பணிமின்கள் கறையுரலை
நேசமுடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சித்
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடிப்
பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(5)
அறுகெடுப்பார் அயனும் அரியும்
அன்றி மற்றிந்திரனோடமரர்
நறுமுறு தேவர் கணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்க ஒட்டோம்
செறிவுடை மும்மதில் எய்த வில்லி
திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி
முறுவற் செவ்வாயினீர் முக்கண்அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
(6)
உலக்கை பல ஓச்சுவார் பெரியர்
உலகமெலாம் உரல் போதாதென்றே
கலக்க அடியவர் வந்து நின்றார்
காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டு கொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த
மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(7)
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாம் எழுந்தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன், எங்கள் !பராபரனுக்
காடக மாமலை அன்ன !கோவுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(8)
வாள் தடங்கண் மடமங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம் பிரானென்று சொல்லிச் சொல்லி
நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங் காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(9)
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
(10)
முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணையொடாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
(11)
மாடு நகைவாள் நிலா எறிப்ப
வாய் திறந்தம்பவளந் துடிப்பப்
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெருமானைத் தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி
ஆடுமின் !அம்பலத்தாடினானுக்
காடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(12)
மையமர் கண்டனை, வான நாடர்
மருந்தினை, மாணிக்கக் கூத்தன் தன்னை
ஐயனை, ஐயர் பிரானை, நம்மை
அகப்படுத்தாட் கொண்டருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை, மெய்யர் மெய்யைப்
போதரிக் கண்ணிணைப், பொற்றொடித் தோள்
பையரவல்குல் மடந்தை நல்லீர்
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
(13)
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை ஆரமுதெங்கள் அப்பன்
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் – மகன் – தகப்பன்
தமையன் – எம்ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
(14)
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாய்இதழுந் துடிப்பச்
சேயிழையீர் சிவலோகம் பாடிக்
கங்கை இரைப்ப அரா இரைக்குங்
கற்றைச் சடைமுடியான் கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
(15)
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை
நாடற்கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனைப், பிறப்பறுத்தாண்டு கொண்ட
கூத்தனை, நாத்தழும்பேற வாழ்த்திப்
பானல் தடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
(16)
ஆவகை நாமும் வந்தன்பர் தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெருமான் – புரஞ்செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே
(17)
தேனக மாமலர்க் கொன்றை பாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல்
வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும்
ஊனக மாமழுச் சூலம் பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று
போனகமாக நஞ்சுண்டல் பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே
(18)
அயன்தலை கொண்டு செண்டாடல் பாடி
அருக்கன் எயிறு பறித்தல் பாடிக்
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
காலனைக் காலால் உதைத்தல் பாடி
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட
நயந்தனைப் பாடி, நின்றாடியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்தும் நாமே
(19)
வட்ட மலர்க்கொன்றை மாலை பாடி
மத்தமும் பாடி, மதியும் பாடிச்
சிட்டர்கள் வாழுந் தென்தில்லை பாடிச்
சிற்றம்பலத்தெங்கள் செல்வம் பாடிக்
கட்டிய மாசுணக் கச்சை பாடிக்
கங்கணம் பாடிக், கவித்த கைம்மேல்
இட்டு நின்றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்தும் நாமே
(20)
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியுமாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே
