(1)
ஏரார் இளங்கிளியே – எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய், ஆரூரன்
செம்பெருமான், வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று
(2)
ஏதமிலா இன்சொல் மரகதமே – ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய், !காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி
(3)
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் – நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதி, என் கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தரகோசமங்கை ஊர்
(4)
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ – நம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய், தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காண் உடையான்ஆறு
(5)
கிஞ்சுகவாய் அஞ்சுகமே – கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய், !நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து
(6)
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே, எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப் பெண்ஏத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து
(7)
கோற்றேன் மொழிக்கிள்ளாய் – கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய், ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடை காண் கைக்கொள் படை
(8)
இன்பால் மொழிக்கிள்ளாய் – எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய், அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத்தோங்கும்
பருமிக்க நாதப் பறை
(9)
ஆய மொழிக்கிள்ளாய் – அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார், என்தீயவினை
நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளி அறுகாம் உவந்த தார்
(10)
சோலைப் பசுங்கிளியே – தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி
