உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்பதானால் – அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும்
அருளைப் புரியாய், பொன்னம்பலத்தெம்
முடியா முதலே – என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே
(2)
முன்னின்றாண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின்னின்றேவல் செய்கின்றேன்
பிற்பட்டொழிந்தேன் பெம்மானே
என்னின்றருளி வரநின்று
போந்திடென்னாவிடில், அடியார்
உன்னின்றிவன்ஆர் என்னாரோ?
பொன்னம்பலக் கூத்துகந்தானே
(3)
உகந்தானே அன்புடை !அடிமைக்
குருகா உள்ளத்துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால்
தக்கவாறன்(று) என்னாரோ?
மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய், அடியேற்குன்
முகந்தான் தாராவிடின் முடிவேன்
பொன்னம்பலத்தெம் முழுமுதலே
(4)
முழுமுதலே, ஐம்புலனுக்கும்
மூவர்க்கும் என்தனக்கும்
வழிமுதலே, நின் !பழவடி
யார் திரள்வான் குழுமிக்
கெழுமுதலே அருள் தந்திருக்க
இரங்குங் கொல்லோ என்று
அழும்அதுவேயன்றி மற்றென்
செய்கேன் பொன்னம்பலத்தரைசே
(5)
அரைசே பொன்னம்பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத்திரவு பகல்
ஏசற்றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசாதிருந்தால் ஏசாரோ
(6)
ஏசா நிற்பர் என்னை !உனக்
கடியான் என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர், யான்தானும்
பேணா நிற்பேன் நின்னருளே
தேசா – நேசர் சூழ்ந்திருக்குந்
திருவோலக்கம் சேவிக்க
ஈசா – பொன்னம்பலத்தாடும்
எந்தாய், இனித்தான் இரங்காயே
(7)
இரங்கும் நமக்கம்பலக் கூத்தன்
என்றென்(று) ஏமாந்திருப்பேனை
அருங்கற்பனை கற்பித்தாண்டாய்
ஆள்வாரிலி மாடாவேனோ?
நெருங்கும் அடியார்களும் நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்துவர எங்கள்
வாழ்வே – வா என்றருளாயே
(8)
அருளாதொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார்ஆர்? இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே, பொன்னம்பலக் கூத்தா
மருளார் மனத்தோடுனைப் பிரிந்து
வருந்துவேனை, வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ
(9)
சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார், கேட்பார், மெச்சுவார்
வெவ்வேறிருந்துன் திருநாமந்
தரிப்பார், பொன்னம்பலத்தாடுந்
தலைவா என்பார், அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே
(10)
நல்காதொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம்பலம் என்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
அருளாய் என்னை உடையானே
