இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே
(2)
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே
(3)
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம் மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டு கொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள் தில்லை கண்டேனே
(4)
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாளனாய் வந்து வனப்பெய்தி இருக்கும் வண்ணம்
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே
(5)
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லல் அறுத்தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யான் எனதென்உரை மாய்த்துக்
கோதில் அமுதானானைக் குலாவு தில்லை கண்டேனே
(6)
பிறவிதனை அறமாற்றிப் பிணி மூப்பென்றிவை இரண்டும்
உறவினொடும் ஒழியச் சென்றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே
(7)
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே
(8)
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்(டு)இங்கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் !கிடப்பேனுக்
களவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுந் தில்லை கண்டேனே
(9)
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத்தொளி வளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில் தில்லை அம்பலத்தே கண்டேனே
(10)
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்கு தில்லை கண்டேனே
