புற்றில் வாளரவும் அஞ்சேன், பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்(கு)
அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(2)
வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவர் எத்தேவரென்ன
அருவராதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(3)
வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத்தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(4)
கிளியனார் கிளவி அஞ்சேன், அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீறாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழுதுள்ளம் !நெக்கிங்
களியிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(5)
பிணியெலாம் வரினும் அஞ்சேன், பிறப்பினோடிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி !வெண்ணீ
றணிகிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(6)
வாளுலாம் எரியும் அஞ்சேன், வரை புரண்டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் – சொற்பதங் கடந்த அப்பன்
தாள தாமரைகள் ஏத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(7)
தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகை முகந்தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்துளாடும்
முகைநகைக் கொன்றை மாலை முன்னவன் பாதமேத்தி
அகம் நெகாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(8)
தறிசெறி களிறும் அஞ்சேன், தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்களேத்திச் சிறந்தினிதிருக்க மாட்டா
அறிவிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(9)
மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுதமாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட !மாட்டா
தஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
(10)
கோணிலா வாளி அஞ்சேன், கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்த்தி நின்றேத்த மாட்டா
ஆணலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே
