யாத்திரைப் பத்து

<– திருவாசகம்

(1)
பூவார் சென்னி மன்னன்எம்
புயங்கப் பெருமான் – சிறியோமை
ஓவாதுள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆஆ என்னப்பட்டன்பாய்
ஆட்பட்டீர் – வந்தொருப்படுமின்,
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட்(டு) உடையான் கழல்புகவே

(2)
புகவே வேண்டா புலன்களில் நீர்,
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின், மிக்கவெல்லாம்
வேண்டா – போக விடுமின்கள்,
நகவே ஞாலத்துள் புகுந்து
நாயேஅனைய நமையாண்ட
தகவே உடையான்தனைச் சாரத்
தளராதிருப்பார் தாந்தாமே

(3)
தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

(4)
அடியார் ஆனீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசேர் அடியே வந்தடைந்து
கடைக் கொண்டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச்
சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே

(5)
விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ் !சாத்தோ
டுடன் போவதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவதடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே

(6)
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்தி !வைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூறடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே

(7)
நிற்பார் நிற்க நில்லா உலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற்கரியன் பெருமானே

(8)
பெருமான் பேரானந்தத்துப்
பிரியாதிருக்கப் பெற்றீர்காள்
அருமாலுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமாலறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே

(9)
சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் – புயங்கன் – அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே

(10)
புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்மின்
சிவலோகக் கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page