மின்னேர் அனைய பூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார் வியனுலகம்
பொன்னேர் அனைய மலர்கொண்டு
போற்றா நின்றார் அமரரெல்லாம்
கன்னேர் அனைய மனக்கடையாய்க்
கழிப்புண்டவலக் கடல் வீழ்ந்த
என்னேர் அனையேன் இனியுன்னைக்
கூடும் வண்ணம் இயம்பாயே
(2)
என்னால் அறியாப் பதம் தந்தாய்
யான் அதறியாதே கெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை
‘உடையாய் அடிமைக்கார்? என்பேன்’
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியரொடுங் கூடா(து)
என்னாயகமே !பிற்பட்டிங்
கிருந்தேன் நோய்க்கு விருந்தாயே
(3)
சீலமின்றி நோன்பின்றிச்
செறிவேயின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி
வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக்
கொடியேன் என்றோ கூடுவதே?
(4)
கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
கேடிலாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவதெல்லாம்நான்
பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத்தழுந்தாமே
காத்தாட்கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லாதொழிந்தக்கால்
நன்றோ எங்கள் நாயகமே
(5)
தாயாய் முலையைத் தருவானே
தாராதொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ
நம்பி இனித்தான் நல்குதியே
தாயே என்றுன் தாளடைந்தேன்
தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக
ஆண்டாய் நான்தான் வேண்டாவோ
(6)
கோவே அருள வேண்டாவோ
கொடியேன் கெடவே அமையுமே
ஆவா என்னாவிடில் என்னை
அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவாரெல்லாம் என்னளவோ
தக்கவாறன்றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ
திகைத்தேன் இனித்தான் தேற்றாயே
(7)
நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம்
பிச்சதேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே, அவினாசி
அப்பா, பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதீ
செய்வதொன்றும் அறியேனே
