திருவார்த்தை

<– திருவாசகம்

(1)
மாதிவர் பாகன், மறைபயின்ற வாசகன், மாமலர்மேய சோதி
கோதில் பரங்கருணை, அடியார் குலாவுநீதி குணமாக நல்கும்
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் – மண்ணிடை வந்திழிந்து
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள்அறிவார்எம் பிரான்ஆவாரே

(2)
மாலயன் வானவர்கோனும் வந்து
வணங்க – அவர்க்கருள் செய்தஈசன்
ஞாலம் அதனிடை வந்திழிந்து
நன்னெறி காட்டி நலந்திகழுங்
கோல மணியணி மாடநீடு
குலாவும் இடவை மடநல்லாட்குச்
சீலமிகக் கருணையளிக்குந்
திறமறிவார்எம் பிரான்ஆவாரே

(3)
அணிமுடி ஆதி, அமரர் கோமான்
ஆனந்தக் கூத்தன், அறுசமயம்
பணிவகை செய்து படவதேறிப்
பாரொடு விண்ணும் பரவியேத்தப்
பிணிகெட நல்கும் பெருந்துறையெம்
பேரருளாளன் – பெண்பால்உகந்து
மணிவலை கொண்டு – வான்மீன் விசிறும்
வகையறிவார்எம் பிரான்ஆவாரே

(4)
வேடுருவாகி மகேந்திரத்து
மிகுகுறை வானவர் வந்து தன்னைத்
தேட இருந்த சிவபெருமான்
சிந்தனை செய்தடியோங்கள் உய்ய
ஆடல் அமர்ந்த பரிமாஏறி
ஐயன் பெருந்துறைஆதி அந்நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட
இயல்பறிவார்எம் பிரான்ஆவாரே

(5)
வந்திமையோர்கள் வணங்கியேத்த
மாக்கருணைக் கடலாய், அடியார்
பந்தனை விண்டற நல்கும் எங்கள்
பரமன் பெருந்துறைஆதி அந்நாள்
உந்து திரைக்கடலைக் !கடந்தன்
றோங்கு மதில்இலங்கை அதனிற்
பந்தணை மெல் விரலாட்கருளும்
பரிசறிவார்எம் பிரான்ஆவாரே

(6)
வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவனாய்க் கடி நாய்கள்சூழ
ஏவற்செயல் செய்யுந் தேவர்முன்னே
எம்பெருமான் தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக்கிரங்கி – ஈசன்
எந்தை – பெருந்துறைஆதி அன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறிவார்எம் பிரான்ஆவாரே

(7)
நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறையெம்
புண்ணியன் – மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள்செய் பெருமை
அறியவல்லார்எம் பிரான்ஆவாரே

(8)
பூவலர் கொன்றைய மாலைமார்பன்
போருகிர் வன்புலி கொன்றவீரன்
மாதுநல்லாள் உமைமங்கை பங்கன்
வண்பொழில்சூழ் தென் பெருந்துறைக்கோன்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன்
இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
ஓவிய மங்கையர் தோள்புணரும்
உருவறிவார்எம் பிரான்ஆவாரே

(9)
தூவெள்ளை நீறணி எம்பெருமான்
சோதி மகேந்திரநாதன் வந்து
தேவர்தொழும் பதம்வைத்த ஈசன்
தென்னன் பெருந்துறையாளி அன்று
காதல் பெருகக் கருணைகாட்டித்
தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளுங்
கிடப்பறிவார் எம் பிரான்ஆவாரே

(10)
அங்கணன், எங்கள் அமரர் பெம்மான்
அடியார்க்கமுதன், அவனி வந்த
எங்கள் பிரான், இரும் பாசந்தீர
இக பரமாயதோர் இன்பமெய்தச்
சங்கங் கவர்ந்து வண் சாத்தினோடுஞ்
சதுரன் பெருந்துறையாளி அன்று
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த
வகையறிவார்எம் பிரான்ஆவாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page