அடைக்கலப் பத்து

<– திருவாசகம்

(1)
செழுக்கமலத் திரளன நின்சேவடி சேர்ந்தமைந்த
பழுத்த மனத்தடியர் உடன்போயினர், யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் – பொல்லாக் கல்வி ஞானமிலா
அழுக்கு மனத்தடியேன், உடையாய் உன் அடைக்கலமே

(2)
வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினால்
பொறுப்பவனே, அராப் பூண்பவனே, பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே, நின் திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே, உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

(3)
பெரும் பெருமான், என்பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தினுள்ளே
வரும் பெருமான், மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான், உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

(4)
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் நின் கழற்புணை !கொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான், யான் இடர்க்கடல் வாய்ச்
சுழிசென்று – மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்றனன், உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

(5)
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம் !மறந்திங்
கிருள்புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன், மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்க – விண்ணோர் பெருமான்
அருள்புரியாய், உடையாய் அடியேன்உன் அடைக்கலமே

(6)
மாழை மைப்பாவிய கண்ணியர் வன்மத்திட உடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழி, எப்போது வந்தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப்பா, உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

(7)
மின்கணினார் நுடங்கும்இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன் கணனாய்ப் புரள்வேனைப் புரளாமற் புகுந்தருளி
என்கணிலே அமுதூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே, உடையாய் அடியேன்உன் அடைக்கலமே

(8)
மாவடு வகிரன்ன கண்ணிபங்கா, நின் மலரடிக்கே
கூவிடுவாய் – கும்பிக்கே இடுவாய் – நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்
ஆ கெடுவேன், உடையாய் அடியேன்உன் அடைக்கலமே

(9)
பிறிவறியா அன்பர் நின்அருட் பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார், உன்னை வந்திப்பதோர்
நெறியறியேன், நின்னையே அறியேன், நின்னையேஅறியும்
அறிவறியேன், உடையாய் அடியேன்உன் அடைக்கலமே

(10)
வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் – விக்கினேன் – வினையேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேன்அன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்ளாய்
அழுங்குகின்றேன், உடையாய் அடியேன்உன் அடைக்கலமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page