பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
யாரொடு நோகேன் – ஆர்க்கெடுத்துரைக்கேன்
ஆண்டநீ அருளிலையானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(2)
வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே, !இருவர்க்
குணர்விறந்(து) உலகம் ஊடுருவும்
செம்பெருமானே, சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே, என்னை ஆள்வானே
என்னைநீ கூவிக் கொண்டருளே
(3)
பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவதுன்னோ(டு) – உவப்பதும் உன்னை
உணர்த்துவதுனக்(கு) எனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(4)
வல்லை வாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா, சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லை மூவுலகும் உருவிஅன்றிருவர்
காணும்நாள் ஆதியீறின்மை
வல்லையாய் வளர்ந்தாய், வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(5)
பண்ணினேர் மொழியாள் பங்க – நீஅல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(6)
பஞ்சின் மெல்லடியாள் பங்க – நீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(7)
பரிதிவாழ் ஒளியாய் – பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர் கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமாறறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(8)
பந்தணை விரலாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே, அரும்பெரும் பொருளே
ஆரமுதே, அடியேனை
வந்துய ஆண்டாய், வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(9)
பாவநாசா உன் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர்தந் தேவே, சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுலகுருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரியானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
(10)
பழுதில் தொல்புகழாள் பங்கநீ அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய், சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ – பிறரைத் துதிப்பனோ – எனக்கோர்
துணையென நினைவனோ – சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே
