திருவெண்பா

<– திருவாசகம்

(1)
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாதென் செய்கேன்?, செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவாதிருந்தேன் மனத்து

(2)
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்?, தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தான் என்பார் ஆரொருவர் தாழ்ந்து

(3)
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் – !வையத்தி
ருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்

(4)
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் – தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து

(5)
அறையோ அறிவார்க்கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலும் மால்கொள்ளும் இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் – !பிரியா
திருந்துறையும் என் நெஞ்சத்தின்று

(6)
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே ஆக்கும் வந்தென் மனத்தை, அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்(து) – இறவாப் பேரின்பம் வந்து

(7)
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே, சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி

(8)
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழாம் அடியேனை, யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை

(9)
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவருங் காணாச் சிவபெருமான் – மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்

(10)
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து
இருந்திரந்து கொள்நெஞ்சே – எல்லாந்தருங் காண்
பெருந்துறையின் மேய பெருங்கருணையாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து

(11)
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றுந்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் – அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page