திருவெம்பாவை

<– திருவாசகம்

(1)
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை – யாம்பாடக் கேட்டேயும் – வாள்தடங்கண்
மாதே வளருதியோ? – வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் – கிடந்தாள் – என்னேஎன்னே!
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

(2)
பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல்நாம்
பேசும் போதெப்போ(து) – இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் – லோகன் – தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார் யாம்ஆர்? ஏலோர் எம்பாவாய்

(3)
முத்தன்ன வெண்ணகையாய் – முன்வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் – வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட்கொண்டாற் பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ நஞ் சிவனை?
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

(4)
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் – அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தை – வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம், நீயேவந்து
எண்ணிக் குறையில் துயில், ஏலோர் எம்பாவாய்

(5)
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

(6)
மானேநீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் – இன்னம் புலர்ந்தின்றோ?
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான் வார்கழல் பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் – உனக்கே உறும் – எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

(7)
அன்னே இவையுஞ் சிலவோ? பலஅமரர்
உன்னற்கரியான் – ஒருவன் – இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென்றெல்லோமுஞ்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் – இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

(8)
கோழி சிலம்பச், சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி – கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

(9)
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் – ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர்ஆவார் – அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்

(10)
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் – திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் – தொண்டருளன்
கோதில் குலத்(து) அரன் தன்கோயிற் பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆர்உற்றார்? ஆர்அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்

(11)
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேர் என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங் காண், ஆரழல்போற்
செய்யா – வெண்ணீறாடீ – செல்வா – சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்

(12)
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் – நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் – இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி, வளைசிலம்ப, வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய, அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்(து) – உடையான் பொற்பாதம்
ஏத்தி, இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

(13)
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் – பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் – சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் – குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

(14)
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட, வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப்பொருள் பாடி, அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச், சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி, அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

(15)
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் – விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

(16)
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்(து) – உடையாள்
என்னத் திகழ்ந்(து) – எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் – பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் – திருப்புருவம்
என்னச் சிலைகுலவி – நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

(17)
செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை – அடியோங்கட்காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

(18)
அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்

(19)
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின்அன்பர் அல்லார் தோள் சேரற்க
எங் கை உனக்கல்லாதெப் பணியுஞ் செய்யற்க
கங்குல்பகல்எங் கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங் கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி(று) எமக்கேலோர் எம்பாவாய்

(20)
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றி எல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page