(1)
அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய், கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் தில்லைக்கருளித்
தேவன் ஆடுமே
(2)
அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள்பயில் தில்லைத்
தென்னன் தமிழும் இசையுங் கலந்த
சிற்றம்பலந் தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள் காண
விகிர்தன் ஆடுமே
(3)
இளமென் முலையார் எழில் மைந்தரொடும்
ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
சிற்றம்பலந் தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
வலக்கை கவித்து !நின்
றளவில் பெருமை அமரர் போற்ற
அழகன் ஆடுமே
(4)
சந்தும் அகிலும் தழைப்பீலிகளும்
சாதி பலவுங் !கொண்
டுந்தி இழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப்பரிய தெய்வப் பதியுள்
சிற்றம்பலந் தன்னுள்
நந்தி முழவங் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே
(5)
ஓமப் புகையும் அகிலின் புகையும்
உயர்ந்து முகில்தோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு
சிற்றம்பலந் தன்னுள்
வாமத்தெழிலார் எடுத்த பாதம்
மழலைச் சிலம்பார்க்கத்
தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
தேவன் ஆடுமே
(6)
குரவங், கோங்கம், குளிர்புன்னை, கைதை
குவிந்த கரைகள் மேல்
திரைவந்துலவுந் தில்லை மல்கு
சிற்றம்பலந் தன்னுள்
வரைபோல் மலிந்த மணிமண்டபத்து
மறையோர் மகிழ்ந்தேத்த
அரவம் ஆட அனல் கையேந்தி
அழகன் ஆடுமே
(7)
சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம்பலவா
என்றென்றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே
(8)
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால்
அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச்
சிற்றம்பலந் தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல்
ஒளிர் மாமணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப்
பரமன் ஆடுமே
(9)
மாலோடயனும் அமரர் பதியும்
வந்து வணங்கி !நின்
றால கண்டா அரனே அருளாய்
என்றென்றவரேத்தச்
சேலாடும் வயல்தில்லை மல்கு
சிற்றம்பலந் தன்னுள்
பாலாடும் முடிச் சடைகள் தாழப்
பரமன் ஆடுமே
(10)
நெடிய சமணும் மறைசாக்கியரும்
நிரம்பாப் பல்கோடிச்
செடியுந் தவத்தோர் அடையாத் தில்லைச்
சிற்றம்பலந் தன்னுள்
அடிகள்அவரை ஆரூர் நம்பி
அவர்கள் இசை பாடக்
கொடியும் விடையும் உடையகோலக்
குழகன் ஆடுமே
(11)
வானோர் பணிய மண்ணோர் ஏத்த
மன்னி நடமாடும்
தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு
சிற்றம்பலத்தானைத்
தூநான்மறையான் அமுத வாலி
சொன்ன தமிழ்மாலைப்
பானேர் பாடல் பத்தும் பாடப்
பாவம் நாசமே
