020 கண்டராதித்தர் – கோயில்

<– 9ஆம் திருமுறை

(1)
மின்னார் உருவம் மேல்விளங்க வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும் தென்தில்லை அம்பலத்துள்
என்னாரமுதை – எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே

(2)
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டுயர்வார்
மூவாயிரவர் தங்களோடு முன்னரங்கேறி நின்ற
கோவே, உந்தன் கூத்துக் காணக் கூடுவதென்று கொலோ

(3)
முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் !நின்னோ
டொத்தே வாழுந் தன்மையாளர் ஓதிய நான்மறையைத்
தெத்தே என்று வண்டு பாடுந் தென்தில்லை அம்பலத்துள்
அத்தா, உந்தன் ஆடல் காண அணைவதும் என்றுகொலோ

(4)
மானைப் புரையும் மடமென்னோக்கி மாமலையாளோடும்
ஆனஞ்சாடுஞ் சென்னிமேல் ஓர் அம்புலிசூடும் அரன்
தேனைப் பாலைத், தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துக்
கோனை, ஞானக்கொழுந்து தன்னைக் கூடுவதென்று கொலோ

(5)
களிவான் உலகிற் கங்கை நங்கை காதலனே அருள் !என்
றொளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க்கருளும்
தெளிவாரமுதே, தில்லை மல்கு செம்பொனின் அம்பலத்துள்
ஒளிவான் சுடரே, உன்னை நாயேன் உறுவதும் என்றுகொலோ

(6)
பாரோர் முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக்காட்டுகந்தான்
வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறையோர் வணங்கச்
சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடுகின்ற
காரார் மிடற்றெங் கண்டனாரைக் காண்பதும் என்றுகொலோ

(7)
இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும்இற
மலைதான் எடுத்த, மற்(று)அவற்கு வாளொடு நாள்கொடுத்தான்
சிலையால் புரமூன்றெய்த வில்லி செம்பொனின் அம்பலத்துக்
கலையார் மறிபொற் கையினானைக் காண்பதும் என்றுகொலோ

(8)
வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமுங் கொண்டதிறற்
செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்இறையை என்றுகொல் எய்துவதே

(9)
நெடியானோடு நான்முகன்னும் வானவரும் நெருங்கி
முடியால் முடிகள் மோதி உக்க முழுமணியின் திரளை
அடியார் அலகினால் திரட்டும் அணிதில்லை அம்பலத்துக்
கடியார் கொன்றை மாலையானைக் காண்பதும் என்றுகொலோ

(10)
சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராஇன்சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page