(1)
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ – சிறிய
என்னை ஆள்விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா, நாற்பெருந் தடந்தோள்
கன்னலே, தேனே, அமுதமே, கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(2)
உண்ணெகிழ்ந்துடலம் நெக்கு முக்கண்ணா
ஓலம் என்றோலமிட்டொரு நாள்
மண்ணின் நின்றலறேன் – வழிமொழி மாலை
மழலையஞ் சிலம்படி முடிமேற்
பண்ணி நின்றுருகேன் – பணிசெயேன் – எனினும்
பாவியேன் ஆவியுள் புகுந்தென்
கண்ணின் நின்றகலான் என்கொலோ? கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(3)
அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே
அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்துள்ளம் அள்ளூறும்
தொண்டருக்கெண்திசைக் கனகம்
பற்பதக் குவையும், பைம்பொன் மாளிகையும்
பவள வாயவர் பணை முலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாங், கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(4)
ஐய பொட்டிட்ட அழகு வாணுதலும்,
அழகிய விழியும், வெண்ணீறும்
சைவம் விட்டிட்ட சடைகளும், சடைமேல்
தரங்கமுஞ், சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள் எண்திக்கும் கண்டநின் தொண்டர்
முகம் மலர்ந்திரு கண் நீர்அரும்பக்
கைகள் மொட்டிக்கும் என்கொலோ? கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(5)
சுருதி வானவனாம், திருநெடுமாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதிவானவனாம், படர்சடை முக்கட்
பகவனாம், அகஉயிர்க்கமுதாம்
எருதுவாகனனாம், எயில்கள் மூன்றெரித்த
ஏறுசேவகனுமாம், பின்னும்
கருதுவார் கருதும் உருவமாங் கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(6)
அண்டம்ஓர் அணுவாம், பெருமைகொண்டணுஓர்
அண்டமாம் சிறுமை கொண்டடியேன்
உண்டவூண் உனக்காம் வகை எனதுள்ளம்
உள்கலந்தெழு பரஞ்சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள் மூன்றெரித்த
கண்டனே, நீல கண்டனே, கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(7)
மோதலைப்பட்ட கடல் வயிறுதித்த
முழுமணித் திரளமுதாங்கே
தாய்தலைப் பட்டங்குருகி ஒன்றாய
தன்மையில், என்னைமுன் ஈன்ற
நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே
நிசிசரர் இருவரோடொருவர்
காதலிற் பட்ட கருணையாய், கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(8)
தத்தைஅங்கனையார் தங்கள்மேல் வைத்த
தயாவை நூறாயிரங் கூறிட்(டு)
அத்திலங்கொரு கூறுன் கண் !வைத்தவருக்
கமருலகளிக்கும் நின் பெருமை
பித்தனென்றொருகாற் பேசுவரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யுங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த, கங்கை
கொண்ட சோளேச்சரத் தானே
(9)
பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போல்
பாவமுன் பறைந்து பாலனைய
புண்ணியம் பின் சென்றறிவினுக்கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை எனினும், நம்ப – நின்பெருமை
நுன்னிடையொடுங்க நீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை, கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(10)
அங்கை கொண்டமரர் மலர்மழை பொழிய
அடிச் சிலம்பலம்ப வந்தொருநாள்
உங்கை கொண்டடியேன் சென்னி வைத்தென்னை
உய்யக் கொண்டருளினை, மருங்கிற்
கொங்கை கொண்டனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள் என்றவிர்சடை முடிமேற்
கங்கைகொண்டிருந்த கடவுளே, கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
(11)
மங்கையோடிருந்தே யோகு செய்வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோடணியுங் கடவுளைக், கங்கை
கொண்ட சோளேச்சரத்தானை
அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்த சொல்மாலையால் ஆழிச்
செங்கையோடுலகில் அரசு வீற்றிருந்து
திளைப்பதுஞ் சிவனருட் கடலே
