(1)
மாலுலா மனந் தந்தென் கையிற் சங்கம்
வவ்வினான் – மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழுதாளுங்
குமரவேள், வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன் – என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே
(2)
இவளை வார்இள மென்கொங்கை பீர் பொங்க
எழில் கவர்ந்தான் இளங்காளை
கவள மாகரி மேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக் குன்றென வருங் கள்வன்
திவள மாளிகைசூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன் நல்லழகன் நங் கோவே
(3)
கோவினைப், பவளக் குழமணக் கோலக்
குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன்
காவனற்சேனை என்னக் காப்பவன், என்
பொன்னை மேகலை கவர்வானே
தேவினற்றலைவன் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தூவிநற் பீலி மாமயிலூருஞ்
சுப்பிரமண்ணியன் தானே
(4)
தானமர் பொருது தானவர் சேனை
மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன்
மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை
மறைநிறை சட்டறம் வளரத்
தேனமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கோனமர் கூத்தன், குலஇளங் களிறென்
கொடிக்கிடர் பயப்பதுங் குணமே
(5)
குணமணிக் குருளைக், கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளாதழகோ?
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்ய, மற்றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே
(6)
கிளையிளஞ் சேய்அக் கிரிதனைக் கீண்ட
ஆண்டகை, கேடில்வேற் செல்வன்
வளையிளம் பிறைச் செஞ்சடை அரன் மதலை
கார்நிற மால் திருமருகன்
திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
முளைஇளங் களிறென் மொய்குழற் !சிறுமிக்
கருளுங் கொல் முருகவேள் பரிந்தே
(7)
பரிந்த செஞ்சுடரோ, பரிதியோ, மின்னோ
பவளத்தின் குழவியோ, பசும்பொன்
சொரிந்த சிந்துரமோ, தூமணித் திரளோ
சுந்தரத்தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
மையல் கொண்டையுறும் வகையே
(8)
வகைமிகும் அசுரர் மாளவந்துழிஞை
வானமர் விளைத்த தாளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத்தவன் திருவடிக்கென்
துடியிடை மடல் தொடங்கினளே
(9)
தொடங்கினள் மடல் என்றணிமுடித் தொங்கற்
புற இதழாகிலும் அருளான்
இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்
மறத்தொழில் வார்த்தையும் உடையன்
திடங்கொள் வைதிகர்வாழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
மடங்கலை – மலரும் பன்னிரு !நயனத்
தறுமுகத்தமுதினை மருண்டே
(10)
மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ் திருப்பிடவூர்
வெருண்ட மான்விழியார்க்கருள் செயா விடுமே
விடலையே, எவர்க்கு மெய்யன்பர்
தெருண்ட வைதிகர்வாழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடைமுடி !முக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே
(11)
கொழுந்திரள் வாயார் தாய் மொழியாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்த சொல்லிவை சுவாமியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே
