(1)
இணங்கிலா ஈசன் நேசத்திருந்த சித்தத்தினேற்கு
மணங்கொள் சீர்த் தில்லைவாணன் மணஅடியார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப்
பிணங்களைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(2)
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்கலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத
துட்டரைத், தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப், பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய் பேசாதப் பேய்களோடே
(3)
அருள்திரள் செம்பொற் சோதி – அம்பலத்தாடுகின்ற
இருள்திரள் கண்டத்தெம்மான் – இன்பருக்கன்பு செய்யா
அரட்டரை, அரட்டுப் பேசும் அழுக்கரைக், கழுக்களாய
பிரட்டரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(4)
துணுக்கென அயனும் மாலும் தொடர்வருஞ் சுடராய் இப்பால்
அணுக்கருக்கணிய செம்பொன் அம்பலத்தாடிக்கல்லாச்
சிணுக்கரைச், செத்தற் கொத்தைச் சிதம்பரைச், சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(5)
திசைக்கு மிக்குலவு கீர்த்தித் தில்லைக் கூத்துகந்து தீய
நசிக்க வெண்ணீறதாடும் நமர்களை நணுகா நாய்கள்
அசிக்க ஆரியங்கள் ஓதும் ஆதரைப், பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(6)
ஆடரவாட ஆடும் அம்பலத்தமுதே என்னும்
சேடர் சேவடிகள் சூடாத் திருவிலா உருவினாரைச்
சாடரைச் சாட்கை மோடச் சழக்கரைப், பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(7)
உருக்கிஎன் உள்ளத்துள்ளே ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப்பருளுந் தில்லைச் செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை, அள்ளல் வாய கள்ளரை, அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(8)
செக்கர் ஒத்திரவி நூறாயிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக், குண்டாம் மிண்ட எத்தரைப், புத்தராதிப்
பொக்கரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(9)
எச்சனைத் தலையைக் கொண்டு, செண்டடித்திடபம் ஏறி
அச்சங் கொண்டமரர் ஓட நின்ற அம்பலவற்கல்லாக்
கச்சரைக், கல்லாப் பொல்லாக் கயவரைப், பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(10)
விண்ணவர் மகுட கோடி மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல் அம்பலவன் கொற்ற வாசலுக்காசையில்லாத்
தெண்ணரைத், தெருளா உள்ளத்திருளரைத், திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
(11)
சிறப்புடை அடியார் தில்லைச் செம்பொன் அம்பலவற்காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறாடார்
இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே
