(1)
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத்(து)ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
(2)
இடர்கெடுத்தென்னை ஆண்டு கொண்டென்னுள்
இருட்பிழம்பற எறிந்தெழுந்த
சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா, அம்பலக் கூத்தா
அயனொடு மால்அறியாமைப்
படரொளி பரப்பிப் பரந்து நின்றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே
(3)
தற்பரம் பொருளே, சசிகண்ட சிகண்டா
சாமகண்டா, அண்ட வாணா
நற்பெரும் பொருளாய் உரை கலந்துன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்தளவிலா உன்னைத்
தந்த பொன்னம்பலத்தரசே
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயைத்
தொண்டனேன் கருதுமா கருதே
(4)
பெருமையிற் சிறுமை பெண்ணொடாணாய் என்
பிறப்பிறப்பறுத்த பேரொளியே
கருமையின் வெளியே, கயற்கணாள் இமவான்
மகள் உமையவள் களைகண்ணே
அருமையின் மறைநான்(கு)ஓலமிட்டரற்றும்
அப்பனே, அம்பலத்தமுதே
ஒருமையிற் பலபுக்குருவி நின்றாயைத்
தொண்டனேன் உரைக்குமாறுரையே
(5)
கோலமே, மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே, கங்கை நாயகா, எங்கள்
காலகாலா, காமநாசா
ஆலமே அமுதுண்டம்பலம் செம்பொற்
கோயில் கொண்டாட வல்லானே
ஞாலமே, தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே
(6)
நீறணி பவளக் குன்றமே, நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே, யோக
வெள்ளமே, மேருவில் வீரா
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத்தரசே
ஏறணி கொடிஎம் ஈசனே, உன்னைத்
தொண்டனேன் இசையுமாறிசையே
(7)
தனதன் நற்றோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே
கனகநற்றூணே, கற்பகக் கொழுந்தே
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே
அனகனே, குமர விநாயக சனக
அம்பலத்தமரர் சேகரனே
நுன கழலிணைஎன் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே
(8)
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
திகைக்கின்றேன் தனைத் திகையாமே
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்த சேவடிக்கீழ்
நிகழ்வித்த நிகரிலா மணியே
அறம்பல திறங் கண்டருந்தவர்க்கரசாய்
ஆலின்கீழ் இருந்த அம்பலவா
புறஞ்சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத்
தொண்டனேன் புணருமா புணரே
(9)
தக்கன் நற்றலையும், எச்சன்வன் தலையும்
தாமரை நான்முகன் தலையும்
ஒக்க விண்டுருள ஒண்திருப்புருவம்
நெறித்தருளிய உருத்திரனே
அக்கணி புலித்தோலாடை மேல்ஆட
ஆடப் பொன்னம்பலத்தாடும்
சொக்கனே, எவர்க்கும் தொடர்வரியாயைத்
தொண்டனேன் தொடருமா தொடரே
(10)
மடங்கலாய்க் கனகன் மார்பு !கீண்டானுக்
கருள்புரி வள்ளலே, மருளார்
இடங்கொள் முப்புரம் வெந்தவிய வைதிகத்தேர்
ஏறிய ஏறுசேவகனே
அடங்க வல்லரக்கன் அரட்டிரு வரைக்கீழ்
அடர்த்த பொன்னம்பலத்தரசே
விடங்கொள் கண்டத்தெம் விடங்கனே, உன்னைத்
தொண்டனேன் விரும்புமா விரும்பே
(11)
மறைகளும் அமரர் கூட்டமும் !மாட்டா
தயன் திருமாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டோர்வரியாயை
மூர்க்கனேன் மொழிந்த புன்மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும் அம்பலத்துள்
நிறைதரு கருணாநிலயமே, உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
