(1)
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
(2)
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே
(3)
நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே
(4)
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்தோத வல்லார் தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கினியான், நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே
(5)
கொல்வாரேனும், குணம்பல நன்மைகள்
இல்லாரேனும், இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே
(6)
மந்தரம்அன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே
(7)
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரை செய்வாயினர் ஆயின், உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே
(8)
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே
(9)
போதன், போதன கண்ணனும், அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே
(10)
கஞ்சி மண்டையர், கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே
(11)
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ்ஞான சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லார்எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...
