268. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பருப்பதம்

(1)
மானும் மரை இனமும் மயிலினமும் கலந்தெங்கும்
தாமே மிக மேய்ந்து தடஞ்சுனை நீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப் பொழிலூடே சென்று புக்குத்
தேமாம் பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே
(2)
மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமே வரும் இனங்கள்
மலைப்பால் கொணர்ந்திடித்தூட்டிட மலங்கித் தமகளிற்றை
அழைத்தோடியும் பிளிறீஅவை அலமந்து வந்தெய்த்துத்
திகைத்தோடித் தம் பிடிதேடிடும் சீபர்ப்பத மலையே
(3)
மன்னிப்புனம் காவல்மட மொழியாள் புனம் காக்கக்
கன்னிக்கிளி வந்து கவைக் கோலிக் கதிர் கொய்ய
என்னைக் கிளி மதியாதென எடுத்துக் கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே
(4)
மய்யார் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்கச்
செவ்வே திரிந்தாயோ எனப் போகாவிட விளிந்து
கய்பாவிய கவணால் மணிஎறிய இரிந்தோடிச்
செவ்வாயன கிளிபாடிடும் சீபர்ப்பத மலையே
(5)
ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலில் திரியத்
தானப்பிடி செவி தாழ்த்திட அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள் இலையால் கலை கோலித்
தேனைப் பிழிந்தினிதூட்டிடும் சீபர்ப்பத மலையே
(6)
மாற்றுக் களிறடைந்தாய் என்று மதவேழம் கையெடுத்து
மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழியத்
தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி அயலறியத்
தேற்றிச் சென்று பிடிசூளறும் சீபர்ப்பத மலையே
(7)
அப்போது வந்து உண்டீர்களுக்கழையாது முன்னிருந்தேன்
எப்போதும் வந்துண்டால் எமை எமர்கள் சுழியாரோ
இப்போது உமக்கிதுவே தொழில் என்றோடி அக்கிளியைச்
செப்பேந்திள முலையாள் எறி சீபர்ப்பத மலையே
(8)
திரியும் புரம் நீறாக்கிய செல்வன் தன கழலை
அரியதிரு மாலோடயன் தானும் அவரறியார்
கரியின் இனமோடும் பிடி தேனுண்டவை களித்துத்
திரி தந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பத மலையே
(9)
ஏனத்திரள் கிளைக்க எரிபோல மணி சிதற
ஏனல்அவை மலைச்சாரலில் திரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும்பல எல்லாம்
தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே
(10)
நல்லாரவர் பலர் வாழ்தரு வயல் நாவலவூரன்
செல்லலுற அரியசிவன் சீபர்ப்பத மலையை
அல்லல்அவை தீரச்சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைசெல உயர் வானகம் ஆண்டங்கிருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page