(1)
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் !அடி
யோமுக்கருள் புரிந்து
பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே
(2)
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்
செய்மின், குழாம் !புகுந்
தண்டங் கடந்த பொருள் – அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே
(3)
நிட்டையிலா உடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடியாரைச் சீராட்டுந்
திறங்களுமே !சிந்தித்
தட்ட மூர்த்திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக்(கு), ஆல நிழற்
பட்டனுக்கென்னைத் தன் பாற்படுத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(4)
சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத்திரள் மேரு
விடங்கன் – விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(5)
புரந்தரன் மால் அயன் !பூசலிட்டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந்தழைப்ப, என் உயிர்ஆண்ட !கோவினுக்
கென் செய வல்லம், என்றும்
கரந்துங் கரவாத கற்பகனாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே
(6)
சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால்
எங்குந் திசைதிசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங் !குழா
மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்கமுதை என் ஆர்வத் தனத்தினை
அப்பனை, ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத்தப்புறத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(7)
சீருந் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற்றேன், !பெற்ற
தார் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமை மணவாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே
(8)
சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணார்இளங்
கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்கும் என்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(9)
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற !சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(10)
தாதையைத் தாளற வீசிய !சண்டிக்கவ்
வண்டத்தொடும் உடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(11)
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவுஞ் சென்று விம்மி
மிகு திருவாரூரின்
மழவிடையாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடியாரொடுங் கூடி எம்மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
(12)
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே
(13)
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் !எமக்கமு
தாம்எம் பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப் !புகுந்
தாண்டு கொண்டாருயிர் மேற்
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று
பல்லாண்டு கூறுதுமே
