(1)
சேலுலாம் வயல் தில்லையுளீர், உமைச்
சாலநாள் அயற் சார்வதினால் இவள்
வேலையார் விடமுண்டுகந்தீர் என்று
மாலதாகும்என் வாணுதலே
(2)
வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாணமற்றனள், நான்அறியேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையுளீர் – உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே
(3)
காரிகைக்கருளீர் கருமால் கரி
ஈருரித்தெழு போர்வையினீர், மிகு
சீரியல் தில்லையாய் சிவனேஎன்று
வேரி நற்குழலாள்இவள் விம்முமே
(4)
விம்மி விம்மியே வெய்துயிர்த்தாள் எனா
உம்மையே நினைந்தேத்தும் ஒன்றாகிலள்
செம்மலோர் பயில் தில்லையுளீர் எங்கள்
அம்மல் ஓதி அயர்வுறுமே
(5)
அயர்வுற்றஞ்சலி கூப்பி அந்தோ எனை
உயஉன் கொன்றையந்தார் அருளாய் எனும்
செயலுற்றார் மதில் தில்லையுளீர் – இவண்
மயலுற்றாள் என்றன் மாதிவளே
(6)
மாதொர்கூறன், வண்டார் கொன்றை மார்பன் !என்
றோதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும்
சேதித்தீர் சிரம் நான்முகனைத், தில்லை
வாதித்தீர் என்மடக் கொடியையே
(7)
கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பிளம்
பிடியை என்செய்திட்டீர், பகைத்தார் புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத்தீர் என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே
(8)
அறவனே, அன்று பன்றிப் பின்ஏகிய
மறவனே, எனை வாதை செய்யேல் எனும்
சிறைவண்டார் பொழில் தில்லையுளீர் எனும்
பிறைகுலாம் நுதற் பெய்வளையே
(9)
அன்றருக்கனைப் பல்லிறுத்தானையைக்
கொன்று, காலனைக் கோள் இழைத்தீர் எனும்
தென்றலார் பொழில் தில்லையுளீர் இவள்
ஒன்றுமாகிலள் உம்பொருட்டே
(10)
ஏயுமாறெழிற் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன
தூயவாறுரைப்பார் துறக்கத்திடை
ஆய இன்பம் எய்தியிருப்பரே
