(1)
வாரணி நறுமலர் வண்டு கெண்டு
பஞ்சமஞ் செண்பக மாலை மாலை
வாரணி வனமுலை மெலியும் வண்ணம்
வந்துவந்திவை நம்மை மயக்குமாலோ
சீரணி மணிதிகழ் மாடமோங்கு
தில்லை அம்பலத்தெங்கள் செல்வன் வாரான்
ஆரெனை அருள் புரிந்தஞ்சல் என்பார்
ஆவியின் பரமன்(று) என்றன் ஆதரவே
(2)
ஆவியின் பரம்என்றன் ஆதரவும்
அருவினையேனை விட்(டு) அம்ம அம்ம
பாவி வன்மனம் இது பையவே போய்ப்
பனிமதிச் சடையரன் பாலதாலோ
நீவியும் நெகிழ்ச்சியும் நிறையழிவும்
நெஞ்சமுந் தஞ்சமிலாமையாலே
ஆவியின் வருத்தமிதார் அறிவார்
அம்பலத்தருநடம் ஆடுவானே
(3)
அம்பலத்தருநடம் ஆடவேயும்
யாதுகொல் விளைவதென்றஞ்சி நெஞ்சம்
உம்பர்கள் வன்பழியாளர் முன்னே
ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்
வன்பல படையுடைப் பூதஞ் சூழ
வானவர் கணங்களை மாற்றியாங்கே
என்பெரும் பயலைமை தீரும் வண்ணம்
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
(4)
எழுந்தருளாய் எங்கள் வீதியூடே
ஏதமில் முனிவரோடெழுந்த ஞானக்
கொழுந்ததுவாகிய கூத்தனே, நின்
குழையணி காதினின் மாத்திரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கனி வாயும் என்சிந்தை வௌவ
அழுந்தும்என் ஆருயிர்க்கென் செய்கேனோ
அரும்புனல் அலமருஞ் சடையினானே
(5)
அரும்புனல் அலமருஞ் சடையினானை
அமரர்கள் அடிபணிந்தரற்ற அந்நாள்
பெரும்புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை
பேசவும் நையும்என் பேதை நெஞ்சம்
கருந்தட மலர்புரை கண்ட வண்டார்
காரிகையார் முன்பென் பெண்மை தோற்றேன்
திருந்திய மலரடி நசையினாலே
தில்லை அம்பலத்தெங்கள் தேவதேவே
(6)
தில்லை அம்பலத்தெங்கள் தேவதேவைத்
தேறிய அந்தணர் சிந்தை செய்யும்
எல்லையதாகிய எழிற்கொள் சோதி
என்னுயிர் காவல் கொண்டிருந்த எந்தாய்
பல்லையார் பசுந்தலையோடிடறிப்
பாதமென் மலரடி நோவ நீபோய்
அல்லினில் அருநடமாடில் எங்கள்
ஆருயிர் காவல் இங்கரிது தானே
(7)
ஆருயிர் காவல் இங்கருமையாலே
அந்தணர் மதலை நின்னடி பணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவிலாதார்
அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயிரே, எங்கள் தில்லை வாணா
சேயிழையார்க்கினி வாழ்வரிதே
(8)
சேயிழையார்க்கினி வாழ்வரிது
திருச்சிற்றம்பலத்தெங்கள் செல்வனேநீ
தாயினும் மிகநல்லை என்றடைந்தேன்
தனிமையை நினைகிலை சங்கரா உன்
பாயிரும் புலியதளின் உடையும்
பைய மேலெடுத்த பொற்பாதமுங் !கண்
டேயிவள் இழந்தது சங்கம் ஆவா
எங்களை ஆளுடை ஈசனேயோ
(9)
எங்களை ஆளுடை ஈசனேயோ
இளமுலை முகம்நெக முயங்கி நின்பொற்
பங்கயம் புரைமுக நோக்கி நோக்கிப்
பனிமதி நிலவதென் மேற்படரச்
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே
திருச்சிற்றம்பலம் உடனே புகுந்து
அங்குன பணிபல செய்து நாளும்
அருள்பெறின் அகலிடத்திருக்கலாமே
(10)
அருள்பெறின் அகலிடத்திருக்கலாம் !என்
றமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரும் அறிவுடையாரின் மிக்கார்
ஏத்துகின்றார் இன்னம் எங்கள் கூத்தை
மருள்படு மழலைமென் மொழியுமையாள்
கணவனை வல்வினையாட்டியேன் நான்
அருள்பெற அலமரும் நெஞ்சம் ஆவா
ஆசையை அளவறுத்தார் இங்காரே
(11)
ஆசையை அளவறுத்தார் இங்காரே
அம்பலத்தருநடம் ஆடுவானை
வாசநன் மலரணி குழல்மடவார்
வைகலும் கலந்தெழு மாலைப்பூசல்
மாசிலா மறைபல ஓது நாவன்
வண்புருடோத்தமன் கண்டுரைத்த
வாசக மலர்கள் கொண்டேத்த வல்லார்
மலைமகள் கணவனை அணைவர் தாமே
