(1)
கோல மலர்நெடுங்கட் கொவ்வை வாய்க்கொடியேர் இடையீர்
பாலினை- இன்னமுதைப் – பரமாய பரஞ்சுடரைச்
சேலுகளும் வயல்சூழ் தில்லை மாநகர்ச் !சிற்றம்பலத்
தேலுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே
(2)
காண்பதி யான் என்றுகொல்?, கதிர்மாமணியைக் – கனலை
ஆண்பெண் அருவுருவென்(று) அறிதற்கரிதாயவனைச்
சேண்பணை மாளிகைசூழ் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
மாண்புடை மாநடஞ்செய் மறையோன் மலர்ப் பாதங்களே
(3)
கள்ளவிழ் தாமரைமேற் கண்டயனோடு மால் பணிய
ஒள்ளெரியின் நடுவே உருவாய்ப் பரந்தோங்கிய சீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை மாநகர்ச் !சிற்றம்பலத்
துள் எரியாடுகின்ற ஒருவனை உணர்வரிதே
(4)
அரிவையோர் கூறுகந்தான், அழகன், எழில் மால்கரியின்
உரிவை நல்லுத்தரியம் உகந்தான், உம்பரார் தம்பிரான்
புரிபவர்க்கின்னருள் செய் புலியூர்த் !திருச்சிற்றம்பலத்
தெரி மகிழ்ந்தாடுகின்ற எம்பிரான் என்இறையவனே
(5)
இறைவனை, என்கதியை, என்னுளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை, மண்ணும்விண்ணும் மலி வான்சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணியாம் இறையை நினைத்தேன், இனிப்போக்குவனே
(6)
நினைத்தேன் இனிப்போக்குவனோ, நிமலத்திரளை, நினைப்பார்
மனத்தினுளே இருந்த மணியை, மணி மாணிக்கத்தைக்
கனைத்திழியுங் கழனிக் கனகங் கதிர் ஒண்பவளம்
சினத்தொடு வந்தெறியுந் தில்லை மாநகர்க் கூத்தனையே
(7)
கூத்தனை, வானவர்தங் கொழுந்தைக், கொழுந்தாய் எழுந்த
மூத்தனை, மூவுருவின் முதலை, முதலாகிநின்ற
ஆத்தனைத், தான்படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள்
ஏத்த நின்றாடுகின்ற எம்பிரான்அடி சேர்வன்கொலோ
(8)
சேர்வன் கொலோ அன்னைமீர், திகழும் மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத் தழுவி அணிநீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்அங்கை மான்மறியன் எம்பிரான்போல் நேசனையே
(9)
நேசமுடையவர்கள் நெஞ்சுளே இடங் கொண்டிருந்த
காய்சின மால்விடையூர் கண்ணுதலைக், காமருசீர்த்
தேசமிகு புகழோர் தில்லை மாநகர்ச் !சிற்றம்பலத்
தீசனை, எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்றேத்துவனே
(10)
இறைவனை ஏத்துகின்ற இளையாள் மொழியின் தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி ஆலைகள்சூழ் மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்தேத்துக, வான்எளிதே
