(1)
பவளமால் வரையைப் பனி படர்ந்தனையதோர்
படரொளி தரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியுங், கொன்றையும்
துன்று பொற்குழல் திருச்சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல் மெழுகொக்கின்றதே
(2)
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும்
அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
நிறை அழிந்திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
படுந்தொறும் அலந்தேனே
(3)
அலந்து போயினேன் அம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
சிலந்தியை அரசாள்க என்றருள்செய்த
தேவ தேவீசனே
உலர்ந்த மார்க்கண்டிக்காகி அக்காலனை
உயிர்செக உதைகொண்ட
மலர்ந்த பாதங்கள் வனமுலை மேல்ஒற்ற
வந்தருள் செய்யாயே
(4)
அருள் செய்தாடு நல்லம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
மருள் செய்தென்றனை வனமுலை பொன் !பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் !செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்து, நல்அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே
(5)
வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந்தின்னமுந் துதிக்கின்றார்
எழில்மறை அவற்றாலே
செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய
தில்லைஅம்பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
பதைபதைப்பொழியாதே
(6)
தேய்ந்து மெய் வெளுத்தகம் வளைந்தரவினை
அஞ்சித்தான் இருந்தேயும்
காய்ந்து வந்து வந்தென்றனை வலிசெய்து
கதிர்நிலா எரிதூவும்
ஆய்ந்த நான்மறை அந்தணர் தில்லையுள்
அம்பலத்தரன் ஆடல்
வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் காண்பதோர்
மனத்தினை உடையேற்கே
(7)
உடையும் பாய்புலித் தோலும் நல்அரவமும்
உண்பதும் பலிதேர்ந்து
விடையதூர்வதும், மேவிடங் கொடுவரை
ஆகிலும், என்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயல்தில்லை
அம்பலத்தனலாடும்
உடைய கோவினையன்றி மற்றாரையும்
உள்ளுவதறியேனே
(8)
அறிவும் மிக்க நன்னாணமும், நிறைமையும்
ஆசையும், இங்குள்ள
உறவும், பெற்ற நற்றாயொடு தந்தையும்
உடன் பிறந்தவரோடும்
பிரிய விட்டுனை அடைந்தனன் ஏன்றுகொள்
பெரும்பற்றப் புலியூரின்
மறைகள் நான்குங் கொண்டந்தணர் ஏத்தநன்
மாநட மகிழ்வானே
(9)
வான நாடுடை மைந்தனேயோ என்பன்
வந்தருளாய் என்பன்
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
பால்வண்ணனே என்பன்
தேனமர் பொழில் சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண்அணி மார்பனே
எனக்கருள் புரியாயே
(10)
புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரியதாடும் எம்ஈசனைக் !காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் !பரமன
தடியிணை பணிவாரே
