022 திருவாலியமுதனார் – கோயில் – ‘மையல் மாதொரு கூறன்’

<– 9ஆம் திருமுறை

(1)
மையல் மாதொரு கூறன், மால்விடையேறி, மான்மறி ஏந்திய தடங்
கையன், கார்புரையுங் கறைக்கண்டன், கனல் மழுவான்
ஐயன், ஆரழல் ஆடுவான், அணிநீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தையுள் இடங் கொண்டனவே

(2)
சலம் பொற்றாமரை தாழ்ந்தெழுந்த தடமுந், தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணியார் தில்லை அம்பலவன்
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தையுள் இடங் கொண்டனவே

(3)
குருண்ட வார்குழற் கோதைமார் குயில் போல் மிழற்றிய கோல மாளிகை
திரண்ட தில்லைதன்னுள் திருமல்கு சிற்றம்பலவன்
மருண்டு மாமலையான் மகள் தொழ ஆடுங் கூத்தன் மணிபுரைதரு
திரண்ட வான்குறங்கென் சிந்தையுள் இடங் கொண்டனவே

(4)
போழ்ந்தி யானை தன்னைப் – பொருப்பன் மகள்உமை அச்சங் கண்டவன்
தாழ்ந்த தண்புனல்சூழ் தட மல்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்னூல் தன்னினொடு
தாழ்ந்த கச்சதன்றே தமியேனைத் தளர்வித்ததே

(5)
பந்த பாசமெலாம்அறப், பசுபாச நீக்கிய பன் !முனிவரோ
டந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன்
செந்தழல் புரை மேனியுந் திகழுந் திருவயிறும், வயிற்றினுள்
உந்தி வான்சுழி என் உள்ளத்துள் இடங் கொண்டனவே

(6)
குதிரை மாவொடு தேர்பல குவிந்தீண்டு தில்லையுட் கொம்பனாரொடு
மதுர வாய்மொழியார் மகிழ்ந்தேத்து சிற்றம்பலவன்
அதிர வார்கழல் வீசி நின்றழகா நடம்பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம் என்னுள்ளத்துள் இடங் கொண்டனவே

(7)
படங்கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருளென்று
தடங்கையால் தொழவுந் தழல் ஆடு சிற்றம்பலவன்
தடங்கை நான்கும், அத் தோள்களுந், தடமார்பினிற் பூண்கள் மேற்றிசை
விடங்கொள் கண்டமன்றே வினையேனை மெலிவித்தவே

(8)
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு தில்லை மாமறையோர்கள் தாந்தொழ
வையம் உய்ய நின்று மகிழ்ந்தாடு சிற்றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும், திகழுந் திருக்காதும், காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடுமன்றே அடியேனை ஆட்கொண்டனவே

(9)
செற்று வன்புரந் தீயெழச்சிலை கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி நீர்த்தில்லை அம்பலவன்
மற்றை நாட்டம் இரண்டொடு மலருந் திருமுகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சுளே திளைக்கின்றனவே

(10)
தொறுக்கள் வான் கமலம் மலருழக்கக், கரும்பு நற்சாறு பாய்தர
மறுக்கமாய்க் கயல்கள் மடைபாய் தில்லைஅம்பலவன்
முறுக்கு வார்சிகை தன்னொடு முகிழ்த்த, அவ்வகத்து மொட்டோடு மத்தமும்
பிறைக்கொள் சென்னியன்றே பிரியாதென்னுள் நின்றனவே

(11)
தூவி நீரொடு பூவவை தொழுதேத்து கையினராகி, மிக்கதோர்
ஆவியுள் நிறுத்தி, அமர்ந்தூறிய அன்பினராய்த்
தேவர் தாந்தொழ ஆடிய தில்லைக் கூத்தனைத் திருவாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடையான் அடி மேவுவரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page