021 வேணாட்டடிகள் – கோயில்

<– 9ஆம் திருமுறை

(1)
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(2)
தம் பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும்
எம் போல்வார்க்கில்லாமை என்னளவே அறிந்தொழிந்தேன்
வம்பானார் பணிஉகத்தி – வழிஅடியேன் தொழில்இறையும்
நம்பாய் காண், திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(3)
பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம் என்றது போலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான் ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள் உரையாடாள்
நசையானேன் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(4)
ஆயாத சமயங்கள் அவரவர்கண் முன்பென்னை
நோயோடு பிணிநலிய இருக்கின்ற அதனாலே
பேயாஇத் தொழும்பனைத் தம் பிரான்இகழும் என்பித்தாய்
நாயேனைத், திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(5)
நின்று நினைந்திருந்து கிடந்தெழுந்து தொழும் தொழும்பனேன்
ஒன்றிஒரு கால் நினையாதிருந்தாலும் இருக்கவொட்டாய்
கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய்
நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(6)
படுமதமும் இடவயிறும் உடைய களிறுடைய பிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கோத்தன்றே
இடுவதுபுல் ஓர் எருதுக்கொன்றினுக்கு வையிடுதல்
நடுவிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(7)
மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய், கண்ணாகாதொழிதலும் நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந்தலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(8)
வாடா வாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாஞ்செய் குற்றேவல் எற்றே, மற்றிது பொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா(று) யானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(9)
வாளா மால்அயன் வீழ்ந்து காண்பரிய மாண்பிதனைத்
தோளாரக் கையாரத் துணையாரத் தொழுதாலும்
ஆளோநீ உடையதுவும், அடியேன்உன் தாள்சேரும்
நாளேதோ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே

(10)
பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டன் !எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
தடுப்பரிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page