019 பூந்துருத்தி நம்பி காடநம்பி – கோயில்

<– 9ஆம் திருமுறை

(1)
முத்து வயிரமணி மாணிக்க மாலை கண்மேல்
தொத்து மிளிர்வனபோல் தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கமாயிற்றே

(2)
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்றுன்
அடியார் அமர்உலகம் ஆள, நீஆளாதே
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரொடும்
குடிவாழ்க்கை கொண்டுநீ குலாவிக்கூத்தாடினையே

(3)
அல்லியம் பூம்பழனத்தாமூர் நாவுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே, தென்தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தாடரங்காகச்
செல்வ நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே

(4)
எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட்டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் தன்னையும் ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும் அணிதில்லைச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கையாயிற்றே

(5)
களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேற்கொள்ள
முளையா மதிசூடி மூவாயிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே

(6)
அகலோகமெல்லாம் அடியவர்கள் தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள் நண்ணியசீர்ச்
சிவலோகம் ஆவதுவுந் தில்லைச் சிற்றம்பலமே

(7)
களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல்
அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப
ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும்
தெளிகொண்ட தில்லைச் சிற்றம்பலமே சேர்ந்தனையே

(8)
பாடகமும் நூபுரமும் பல்சிலம்பும் பேர்ந்தொலிப்பச்
சூடகக்கை நல்லார் தொழுதேத்தத் தொல்லுலகில்
நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாடோறும்
ஆடகத்தான் மேய்ந்தமைந்த அம்பலம்நின் ஆடரங்கே

(9)
உருவத்தெரியுருவாய் ஊழிதோறெத்தனையும்
பரவிக் கிடந்தயனும் மாலும் பணிந்தேத்த
இரவிக்கு நேராகி ஏய்ந்திலங்கு மாளிகை !சூழ்ந்
தரவிக்கும் அம்பலமே ஆடரங்கமாயிற்றே

(10)
சேடர் உறைதில்லைச் சிற்றம்பலத்தான் தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கறிந்து பூந்துருத்திக்
காடன் தமிழ்மாலை பத்துங் கருத்தறிந்து
பாடும் இவைவல்லார் பற்றுநிலை பற்றுவரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page