017 கருவூர்த் தேவர் – திருவிடைமருதூர்

<– 9ஆம் திருமுறை

(1)
வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல் யாமத்தோர்
பைய செம்பாந்தள் பருமணி உமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐய செம்பொன் தோட்டவிர்சடை மொழுப்பின்
அழிவழகிய திருநீற்று
மைய செங்கண்டத்(து)அண்ட வானவர்கோன்
மருவிடந் திருவிடைமருதே

(2)
இந்திரலோக முழுவதும் !பணிகேட்
டிணையடி தொழுதெழத், தாம்போய்
ஐந்தலை நாக மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமுன் பாடச்
சாதி கின்னரங் கலந்தொலிப்ப
மந்திர கீதந் தீங்குழல் எங்கும்
மருவிடந் திருவிடைமருதே

(3)
பனிபடு மதியம் பயில்கொழுந்தன்ன
பல்லவம் வல்லிஎன்றிங்ஙன்
வினைபடு கனகம் போல யாவையுமாய்
வீங்குல(கு)ஒழிவற நிறைந்து
துனிபடு கலவி மலைமகளுடனாய்த்
தூங்கிருள் நடுநல் யாமத்தென்
மனனிடை அணுகி நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடைமருதே

(4)
அணியுமிழ் சோதி மணியினுள் !கலந்தாங்
கடியனேனுள் கலந்(து), அடியேன்
பணிமகிழ்ந்தருளும் அரிவை பாகத்தன்
படர்சடை விடமிடற்றடிகள்
துணியுமிழ்ஆடை அரையில்ஓர் ஆடை
சுடர்உமிழ்தர அதனருகே
மணியுமிழ் நாக மணி உமிழ்ந்திமைப்ப
மருவிடந் திருவிடைமருதே

(5)
பந்தமும் பிரிவுந் தெரிபொருட் பனுவற்
படிவழி சென்று சென்றேறிச்
சிந்தையுந் தானுங் கலந்ததோர் கலவி
தெரியினுந் தெரிவுறா வண்ணம்
எந்தையுந் தாயும் யானும் என்றிங்ஙன்
எண்ணில் பல்லூழிகள் உடனாய்
வந்தணுகாது நுணுகியுள் கலந்தோன்
மருவிடந் திருவிடைமருதே

(6)
எரிதரு கரிகாட்டிடு பிணநிணம் !உண்
டேப்பமிட்(டு) –  இலங்கெயிற்றழல் வாய்த்
துருகழல் நெடும் பேய்க்கணம் எழுந்தாடுந்
தூங்கிருள் நடுநல் யாமத்தே
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
அந்தி போன்றொளிர் திருமேனி
வரியரவாட ஆடும்எம் பெருமான்
மருவிடந் திருவிடைமருதே

(7)
எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி பட நனைந்துருகி
அழலையாழ் புருவம் புனலொடுங் கிடந்தாங்(கு)
ஆதனேன் மாதரார் கலவித்
தொழிலை ஆழ்நெஞ்சம் இடர்படா வண்ணம்
தூங்கிருள் நடுநல் யாமத்தோர்
மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்
மருவிடந் திருவிடைமருதே

(8)
வையவாம் பெற்றம் பெற்றம் ஏறுடையார்
மாதவர் காதல் வைத்தென்னை
வெய்யவாஞ் செந்தீப் பட்ட இட்டிகைபோல்
விழுமியோன் முன்பு பின்பென்கோ
நொய்யவாறென்ன வந்துள் வீற்றிருந்த
நூறு நூறாயிர கோடி
மையவாங் கண்டத்(து) அண்ட வானவர்கோன்
மருவிடந் திருவிடைமருதே

(9)
கலங்கலம் பொய்கைப் புனல் தெளிவிடத்துக்
கலந்த மண்ணிடைக் கிடந்தாங்கு
நலங் கலந்தடியேன் சிந்தையுட் புகுந்த
நம்பனே – வம்பனேனுடைய
புலங் கலந்தவனே என்று நின்றுருகிப்
புலம்புவார் – அவம்புகார் – அருவி
மலங்கலங் கண்ணிற் கண்மணி அனையான்
மருவிடந் திருவிடைமருதே

(10)
ஒருங்கிரு கண்ணின் எண்ணில்புன் மாக்கள்
உறங்கிருள் நடுநல் யாமத்தோர்
கருங்கண் நின்றிமைக்குஞ் செழுஞ்சுடர் விளக்கங்
கலந்தெனக் கலந்துணர் கருவூர்
தருங் கரும்பனைய தீந்தமிழ் மாலை
தடம்பொழில் மருதயாழ் உதிப்ப
வருங் கருங்கண்டத்(து)அண்ட வானவர் கோன்
மருவிடந் திருவிடைமருதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page