016 கருவூர்த் தேவர் – தஞ்சை இராசராசேச்சரம்

<– 9ஆம் திருமுறை

(1)
உலகெலாம் தொழ வந்தெழுகதிர்ப் பரிதி
ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பச்சோ
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர் வெண்திங்கள்
இலைகுலாம் பதணத்திஞ்சி சூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(2)
நெற்றியிற்கண் என் கண்ணினின்றகலா
நெஞ்சினில் அஞ்சிலம்பலைக்கும்
பொற்றிருவடி என் குடிமுழுதாளப்
புகுந்தன – போந்தனவில்லை
மற்றெனக்குறவென்? மறிதிரை !வடவாற்
றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(3)
சடைகெழு மகுடந் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ? கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியொடு !முடிதேய்ந்
துக்க செஞ் சுடர்ப்படு !குவையோங்
கிடைகெழு மாடத்திஞ்சி சூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(4)
வாழி அம்போதத்தருகு பாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும், இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(5)
எவருமா மறைகள், எவையும் வானவர்கள்
ஈட்டமுந் தாட்டிருக் !கமலத்
தவரு(ம்) மாலவனும் அறிவரும் பெருமை
அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறு களிற்றரசினதீட்டம்
இவருமால் வரைசெய், இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(6)
அருளுமாறருளி ஆளுமாறாள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும் வார்காதும் காட்டி – யான்பெற்ற
குயிலினை மயல் செய்வதழகோ?
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(7)
தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர் இறப்பிலை உதிர்வென்றால்
நினைப்பருந் தம்பாற் சேறல் இன்றேனும்
நெஞ்சிடிந்துருகுவதென்னோ?
சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச்
சூழல் மாளிகை சுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(8)
பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம் பலர் ஏம்பலித்திருக்க
என்னெடுங் கோயில் நெஞ்சுவீற்றிருந்த
எளிமையை என்றுநான் மறக்கேன்
மின்னெடும் புருவத்திள மயிலனையார்
விலங்கல்செய் நாடக சாலை
இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(9)
மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத்தொளிப்பார்
அங்கழற் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதிர் அனையர், வாழியரோ
பொங்கெழில் திருநீறழிபொசி வனப்பிற்
புனல் துளும்பவிர்சடை மொழுப்பர்
எங்களுக்கினியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசாராசேச்சரத்திவர்க்கே

(10)
தனியர், எத்தனை ஓராயிர வருமாந்
தன்மையர், என் வயத்தினராங்
கனியர்அத்தரு தீங்கரும்பர், வெண்புரிநூற்
கட்டியர், அட்ட ஆரமிர்தர்
புனிதர், பொற்கழலர், புரிசடா மகுடர்
புண்ணியர், பொய்யிலா !மெய்யர்க்
கினியர் எத்தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவர்க்கே

(11)
சரள மந்தார சண்பக வகுள
சந்தன நந்தனவனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசராசேச்சரத்திவரை
அருமருந்தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்த சொல்மாலை ஈரைந்தின்
பொருள் மருந்துடையோர் சிவபதமென்னும்
பொன்னெடுங் குன்றுடையோரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page