(1)
பெரியவா கருணை, இளநிலா வெறிக்கும்
பிறைதவழ் சடை மொழுப்பவிழ்ந்து
சரியுமா சுழியங் குழை மிளிர்ந்திருபால்
தாழ்ந்தவா காதுகள், கண்டம்
கரியவா, தாமுஞ் செய்யவாய் முறுவல்
காட்டுமா சாட்டியக்குடியார்
இருகைகூம்பின கண்டலர்ந்தவா முகம், ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
(2)
பாந்தள் பூணாரம், பரிகலங் கபாலம்
பட்டவர்த்தனம் எரு(து), அன்பர்
வார்ந்த கண்ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ(று), அருமறை கீதம்
சடைமுடி சாட்டியக்குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில்மாளிகை, ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
(3)
தொழுதுபின் செல்வ(து)அயன் முதற்கூட்டம்
தொடர்வன மறைகள் நான்கெனினும்
கழுதுறு கரிகாடுறைவிடம், போர்வை
கவந்திகை கரியுரி, திரிந்தூண்
தழலுமிழ் அரவங் கோவணம், பளிங்கு
சபவடம் சாட்டியக்குடியார்
இழுதுநெய் சொரிந்தோம் பழல்ஒளி விளக்(கு), ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
(4)
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும்
பரிவொடு பாடு காந்தர்ப்பர்
கதியெலாம் அரங்கம் பிணையல் மூவுலகில்
கடியிருள் திருநடம் புரியும்
சதியிலார் கலியில் ஒலிசெயுங் கையில்
தமருகஞ் சாட்டியக்குடியார்
இதயமாங் கமலங் கமல வர்த்தனை, ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
(5)
திருமகன் முருகன், தேவியேல் உமையாள்
திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன், மாமனேல் இமவான்
மலையுடை அரையர்தம் பாவை
தருமனை, வளனாஞ் சிவபுரன், தோழன்
தனபதி, சாட்டியக்குடியார்
இருமுகம் – கழல் மூன்(று) – ஏழு கைத்தலம், ஏழ்
இருக்கையில் இருந்த ஈசனுக்கே
(6)
அனலமே, புனலே, அனிலமே, புவனி
அம்பரா அம்பரத்தளிக்கும்
கனகமே, வெள்ளிக் குன்றமே, என்றன்
களைகணே, களைகண் மற்றில்லாத்
தனியனேன் உள்ளங் கோயில் கொண்டருளும்
சைவனே, சாட்டியக் !குடியார்க்
கினிய தீங்கனியாய், ஒழிவற நிறைந்(து)ஏழ்
இருக்கையில் இருந்தவாறியம்பே
(7)
செம்பொனே, பவளக் குன்றமே, நின்ற
திசைமுகன் மால்முதற் !கூட்டத்
தன்பரானவர்கள் பருகும் ஆரமுதே
அத்தனே, பித்தனேனுடைய
சம்புவே, அணுவே, தாணுவே, சிவனே
சங்கரா !சாட்டியக்குடியார்க்
கின்பனே, எங்கும் ஒழிவற நிறைந்(து)ஏழ்
இருக்கையில் இருந்தவாறியம்பே
(8)
செங்கணா போற்றி, திசைமுகா போற்றி
சிவபுர நகருள் வீற்றிருந்த
அங்கணா போற்றி, அமரனே போற்றி
அமரர்கள் தலைவனே போற்றி
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
சாட்டியக் குடியிருந்தருளும்
எங்கணாயகனே போற்றி, ஏழிருக்கை
இறைவனே போற்றியே போற்றி
(9)
சித்தனே அருளாய், செங்கணா அருளாய்
சிவபுர நகருள் வீற்றிருந்த
அத்தனே அருளாய், அமரனே அருளாய்
அமரர்கள் அதிபனே அருளாய்
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
சாட்டியக்குடியுள் ஏழிருக்கை
முத்தனே அருளாய், முதல்வனே அருளாய்
முன்னவா துயர் கெடுத்தெனக்கே
(10)
தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக்குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும் ஏழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில் கருவூரன்
கழறு சொல்மாலை ஈரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக்கன்றே
வளரொளி விளங்கு வானுலகே
