(1)
நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே
ஆரோங்கி முகம் மலர்ந்தாங்கரு வினையேன் திறம் !மறந்தின்
றூரோங்கும் பழி பாராதுன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(2)
நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(3)
அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள்மனத்தின்
முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே, என் மருந்தே, நல்வளர் முக்கட்
செம்பளிங்கே, பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(4)
மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாரா(து)
இஞ்ஞின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ் ஞன்றியிலன் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(5)
நீ வாராதொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்துங் குவளைமலர் சொரிந்தனவால்
ஆவா என்றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா, தென்பொழிற் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(6)
முழுவதும் நீயாயினும்இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள் – பயில்வதும் நின்னொரு நாமம்
அழுவதும் நின்திறம் நினைந்தே – அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(7)
தன்சோதி எழுமேனித் தபனியப் பூச்சாய்க் காட்டாய்
உன்சோதி எழில்காண்பான் ஓலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாக்கண் இவளுடைய துயர் தீருமாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(8)
அரும் பேதைக்கருள் புரியாதொழிந்தாய், நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடு – நின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய், நளிர்புரிசைக் குளிர்வனம் !பா
திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(9)
ஆறாத பேரன்பினவர் உள்ளங் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(10)
சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்த பரிசொரு நாள் கண்டிரங்காய் எம்பெருமானே
முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்து விழவணி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
(11)
ஆரணத்தேன் பருகி அருந்தமிழ் மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
