(1)
புவன நாயகனே, அகவுயிர்க்கமுதே
பூரணா, ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே, பணி செய்வார்க்கிரங்கும்
பசுபதீ, பன்னகாபரணா
அவனிஞாயிறு போன்றருள் புரிந்தடியேன்
அகத்திலும் – முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங்கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே
(2)
புழுங்கு தீவினையேன் வினைகெடப் புகுந்து
புணர் பொருளுணர்வு நூல்வகையால்
வழங்கு தேன்பொழியும் பவளவாய் – முக்கண்
வளரொளி மணி நெடுங்குன்றே
முழங்கு தீம்புனல் பாய்ந்திளவரால் உகளும்
முகத்தலை அகத்தமர்ந்தடியேன்
விழுங்கு தீங்கனியாய் – இனிய ஆனந்த
வெள்ளமாய் உள்ளமாயினையே
(3)
கன்னகா உள்ளக் கள்வனேன் – நின்கண்
கசிவிலேன் – கண்ணின்நீர் சொரியேன்
முன்னகா ஒழியேன் – ஆயினும் செழுநீர்
முகத்தலை அகத்தமர்ந்துறையும்
பன்னகாபரணா – பவளவாய் மணியே
பாவியேன் ஆவியுள் !புகுந்த
தென்ன காரணம்நீ? ஏழை !நாயடியேற்
கெளிமையோ பெருமையா அதுவே
(4)
கேடிலா மெய்ந்நூல் கெழுமியுஞ் !செழுநீர்க்
கிடை அனாருடைய என்னெஞ்சிற்
பாடிலா மணியே, மணிஉமிழ்ந்தொளிரும்
பரமனே – பன்னகாபரணா
மேடெலாஞ் செந்நெற் பசுங்கதிர் விளைந்து
மிகத்திகழ் முகத்தலை மூதூர்
நீடினாய்எனினும், உள்புகுந்தடியேன்
நெஞ்செலாம் நிறைந்து நின்றாயே
(5)
அக்கனா அனைய செல்வமே !சிந்தித்
தைவரோடென்னொடும் விளைந்த
இக்கலாம் முழுதும் ஒழிய வந்துள்புக்(கு)
என்னையாள் ஆண்ட நாயகனே
முக்கணாயகனே, முழுதுலகிறைஞ்ச
முகத்தலை அகத்தமர்ந்தடியேன்
பக்கல்ஆனந்தம் இடையறா வண்ணம்
பண்ணினாய் பவளவாய் மொழிந்தே
(6)
புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்
பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும்
வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்தென்
மனம்நெக மகிழ்ந்த பேரொளியே
முனைபடு மதில் மூன்றெரித்த நாயகனே
முகத்தலை அகத்தமர்ந்தடியேன்
வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால்
விழுமிய விமானமாயினதே
(7)
விரியும் நீராலக் கருமையின், சாந்தின்
வெண்மையும், செந்நிறத்தொளியும்
கரியும் நீறாடுங் கனலும் ஒத்தொளிருங்
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முரியுமாறெல்லாம் முரிந்தழகியையாய்
முகத்தலை அகத்தமர்ந்தாயைப்
பிரியுமாறுளதே, பேய்களோம் செய்த
பிழைபொறுத்தாண்ட பேரொளியே
(8)
என்னைஉன் பாத பங்கயம் !பணிவித்
தென்பெலாம் உருகநீ !எளிவந்
துன்னை என்பால் வைத்தெங்கும் எஞ்ஞான்றும்
ஒழிவற நிறைந்த ஒண்சுடரே
முன்னைஎன் பாசம் முழுவதும் அகல
முகத்தலை அகத்தமர்ந்தெனக்கே
கன்னலும் பாலுந் தேனும் ஆரமுதும்
கனியுமாய் இனியை ஆயினையே
(9)
அம்பரா அனலா அனிலமே புவிநீ
அம்புவே இந்துவே இரவி
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்
ஒழிவற நிறைந்த ஒண்சுடரே
மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறிவாளர்
முகத்தலை அகத்தமர்ந்தெனக்கே
எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே
எந்தையுந் தாயும் ஆயினையே
(10)
மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை அகத்தமர்ந்தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகாபரணன்
பனிமலர்த் திருவடியிணை மேல்
ஆலையம் பாகின்அனைய சொற்கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவர் எல்லாம்
சிவபதங் குறுகி நின்றாரே
