(1)
தளிரொளி மணிப் பூம்பதம் சிலம்பலம்பச்
சடைவிரித் தலையெறி கங்கைத்
தெளிரொளி மணிநீர்த் திவலை முத்தரும்பித்
திருமுகம் மலர்ந்து சொட்டட்டக்
கிளரொளி மணிவண்டறை பொழிற் பழனங்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வளரொளி மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தன் என் மனங்கலந்தானே
(2)
துண்ட வெண்பிறையும், படர்சடை மொழுப்பும்
சுழியமுஞ் சூலமும், நீல
கண்டமுங், குழையும், பவளவாய் இதழும்
கண்ணுதல் திலகமுங் காட்டிக்
கெண்டையுங் கயலும் உகளும் நீர்ப்பழனங்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வண்டறை மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தன் என் மனங்கலந்தானே
(3)
திருநுதல் விழியும், பவளவாய் இதழும்
திலகமும் உடையவன், சடைமேற்
புரிதரு மலரின் தாது நின்றூதப்
போய்வருந் தும்பிகாள் – இங்கே
கிரிதவழ் முகிலின்கீழ்த் தவழ் மாடங்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வருதிறல் மணிஅம்பலவனைக் கண்டென்
மனத்தையுங் கொண்டு போதுமினே
(4)
தெள்ளு நீறவன் நீறென்உடல் விரும்பும்
செவிஅவன் அறிவுநூல் கேட்கும்
மெள்ளவே அவன்பேர் விளம்பும் வாய், கண்கள்
விமானமே நோக்கி வெவ்வுயிர்க்கும்
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சி மாம்பொழிற்கே
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வள்ளலே, மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தனே என்னும்என் மனனே
(5)
தோழி யாஞ்செய்த தொழில்என்? எம்பெருமான்
துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோறூழி உணர்ந்துளங் கசிந்து
நெக்கு நைந்துளங் கரைந்துருக்கும்
கேழலும் புள்ளுமாகி நின்றிருவர்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
வாழிய மணி அம்பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழியோமே
(6)
என்செய்கோம் தோழி? தோழிநீ துணையா
இரவுபோம், பகல் வருமாகில்
அஞ்சலோ என்னான், ஆழியுந் திரையும்
அலமருமாறு கண்டயர்வன்
கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவிற்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மஞ்சணி மணிஅம்பலவவோ என்று
மயங்குவன் மாலையம் பொழுதே
(7)
தழைதவழ் மொழுப்பும், தவள நீற்றொளியும்
சங்கமுஞ், சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியுங், குளிர்சடைத் தெண்டும்
குண்டையுங் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மழைதவழ் மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தர்தம் வாழ்வு போன்றதுவே
(8)
தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை
தமருகந், திருவடி, !திருநீ
றின்னகை, மழலை கங்கை, கொங்கிதழி
இளம்பிறை, குழைவளர் இளமான்
கின்னரம் முழவம் மழலையாழ் வீணை
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மன்னவன் மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தன்என் மனத்துள் வைத்தனனே
(9)
யாதுநீ நினைவ(து), எவரை யாமுடைய(து)
எவர்களும் யாவையும் தானாய்ப்
பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்
பனிமலர்க் கண்ணுள் நின்றகலான்
கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவு கீழ்க்கோட்டூர்
மாதவன் மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தன் என் மனம் புகுந்தானே
(10)
அந்திபோல் உருவும், அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும், வெண்ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்
செய்வதென்? தெளிபுனல் அலங்கற்
கெந்தியா உகளுங் கெண்டை புண்டரீகங்
கிழிக்குந் தண்பணை செய் கீழ்க்கோட்டூர்
வந்தநாள் மணிஅம்பலத்துள் நின்றாடும்
மைந்தனே அறியும் என் மனமே
(11)
கித்தி நின்றாடும் அரிவையர் தெருவிற்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்
மத்தனை, மணி அம்பலத்துள் நின்றாடும்
மைந்தனை, ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
பெரியவர்க்(கு) அகலிரு விசும்பின்
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல்
முகமலர்ந்தெதிர் கொளுந் திருவே
