009 கருவூர்த் தேவர் – திருக்களந்தை ஆதித்தேச்சரம்

<– 9ஆம் திருமுறை

(1)
கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
கற்பினிற் பெற்றெடுத்தெனக்கே
முலை கடந்தருளுந் தாயினும் நல்ல
முக்கணான் உறைவிடம் போலும்
மலை குடைந்தனைய நெடுநிலை மாட
மருங்கெலாம் மறையவர் !முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(2)
சந்தன களபந் துதைந்தநன் மேனித்
தவளவெண் பொடிமுழுதாடும்
செந்தழல்உருவிற் பொலிந்து நோக்குடைய
திருநுதலவர்க்கிடம் போலும்
இந்தன விலங்கல் எறிபுனந் !தீப்பட்
டெரிவதொத்(து) எழுநிலை மாடம்
அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(3)
கரியரே இடந்தான் – செய்யரே ஒருபால்
கழுத்தில்ஓர் தனிவடஞ் சேர்த்தி
முரிவரே, முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
முறைதெரிந்தோர் – உடம்பினராம்
இருவரே, முக்கண் நாற்பெருந் தடந்தோள்
இறைவரே, மறைகளுந் தேட
அரியரேஆகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(4)
பழையராந் தொண்டர்க்கெளியரே, !மிண்டர்க்
கரியரே, பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத்தருளாப்
பிச்சரே, நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழுதாளுங்
குழகரே, ஒழுகுநீர்க் கங்கை
அழகரேஆகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(5)
பவளமே மகுடம், பவளமே திருவாய்
பவளமே திருவுடம்பதனில்
தவளமே களபந், தவளமே புரிநூல்
தவளமே முறுவல், ஆடரவந்
துவளுமே, கலையுந் துகிலுமே ஒருபால்
துடியிடை இடமருங்கொருத்தி
அவளுமேஆகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(6)
நீலமே கண்டம், பவளமே திருவாய்
நித்திலம் நிரைத்திலங்கினவே
போலுமே முறுவல், நிறையஆனந்தம்
பொழியுமே திருமுகம், ஒருவர்
கோலமே அச்சோ அழகிதேயென்று
குழைவரே கண்டவர், !உண்ட
தாலமேஆகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(7)
திக்கடா நினைந்து நெஞ்சிடிந்துருகுந்
திறத்தவர் புறத்திருந்தலச
மைக்கடா அனைய என்னையாள் விரும்பி
மற்றொரு பிறவியிற் பிறந்து
பொய்க்கடா வண்ணங் காத்தெனக்கருளே
புரியவும் வல்லரே – எல்லே
அக்கடாவாகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(8)
மெய்யரே மெய்யர்க்கிடு திருவான
விளக்கரே, எழுதுகோல் வளையாள்
மையரே, வையம் பலிதிரிந்துறையும்
மயானரே, உளங் கலந்திருந்தும்
பொய்யரே பொய்யர்க்(கு), அடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள் கிழித்தெழுந்த
ஐயரேயாகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(9)
குமுதமே திருவாய், குவளையே களமும்
குழையதே இருசெவி ஒருபால்
விமலமே கலையும் உடையரே, சடைமேல்
மிளிருமே பொறிவரி நாகம்
கமலமே வதனம், கமலமே நயனம்
கனகமே திருவடி நிலை, நீர்
அமலமேயாகில் அவர்இடங் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச்சரமே
(10)
நீரணங்கசும்பு கழனிசூழ் களந்தை
நிறைபுகழ் ஆதித்தேச்சரத்து
நாரணன் பரவுந் திருவடி நிலைமேல்
நலமலி கலைபயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த
அமுதம்ஊறிய தமிழ் மாலை
ஏரணங்(கு) இருநான்கிரண்டிவை வல்லோர்
இருள்கிழித்தெழுந்த சிந்தையரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page