(1)
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள் வெள்ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம் விரிதரு தேமாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(2)
இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற்கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே – யார் துணையென்றால்
அஞ்சலென்றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனங் குழைத்த செஞ்சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(3)
தாயினேர் இரங்குந் தலைவவோ என்றும்
தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினேர் அரும்பு மணிமுருக்கலர
வளரிளஞ் சோலை மாந்தளிர்செந்
தீயினேர் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(4)
துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்
தொடர்ந்திருடியர் கணந் துதிப்ப
நந்திகை முழவம் முகிலென முழங்க
நடம்புரி பரமர்தங் கோயில்
அந்தியின் மறை நான்காரணம் பொதிந்த
அரும்பெறல் மறைப்பொருள் மறையோர்
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(5)
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலம் !என்றோலிட்
டென்பெலாம் உருகும் அன்பர்தங் !கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடி நின்றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(6)
நெஞ்சிடர் அகல அகம் புகுந்தொடுங்கு
நிலைமையோடிருள் கிழித்தெழுந்த
வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும்
விரிசடை அடிகள்தங் கோயில்
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் !வட்டத்
தகம்படி மணிநிரை பரந்த
செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(7)
பூத்திரள் உருவஞ் செங்கதிர் விரியாப்
புந்தியில் வந்த மால்விடையோன்
தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றந்
தோன்ற நின்றவன் வளர்கோயில்
நாத்திரள் மறையோர்ந்தோம குண்டத்து
நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(8)
சீர்த்ததிண் புவனம் முழுவதும், ஏனைத்
திசைகளோடண்டங்கள் அனைத்தும்
போர்த்ததம் பெருமை சிறுமை புக்கொடுங்கும்
புணர்ப்புடை அடிகள்தங் கோயில்
ஆர்த்து வந்தமரித்தமரரும் பிறரும்
அலைகடல் இடுதிரைப் புனிதத்
தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(9)
பின்னுசெஞ்சடையும் பிறைதவழ் மொழுப்பும்
பெரியதங் கருணையுங் காட்டி
அன்னைதேன் கலந்தின்னமு(து) !உகந்தளித்தாங்
கருள்புரி பரமர்தங் கோயில்
புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும்
தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(10)
உம்பர் நாடிம்பர் விளங்கியாங்கெங்கும்
ஒளிவளர் திருமணிச் சுடர் !கான்
றெம்பிரான் நடஞ்செய் சூழலங்கெல்லாம்
இருட்பிழம்பற எறி கோயில்
வம்புலாங் கோயில் கோபுரங் கூடம்
வளர்நிலை மாட மாளிகைகள்
செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
(11)
இருந்திரைத் தரளப் பரவை சூழகலத்
தெண்ணிலங் கண்ணில்புன் மாக்கள்
திருந்துயிர்ப் பருவத்தறிவுறு கருவூர்த்
துறைவளர் தீந்தமிழ் மாலை
பொருந்தருங் கருணைப் பரமர்தங் கோயில்
பொழிலகங் குடைந்து வண்டுறங்கச்
செருந்தி நின்றரும்பும் பெரும்பற்றப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே
