(1)
பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப் புகழாளர்ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர் மிகு காவிரிக்கரை மேய
ஐயா – திருவாவடுதுறை அமுதே என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கொன்றருளாதொழிவது மாதிமையே
(2)
மாதி மணங் கமழும் பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழியோர் தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணிஆவடுதுறை நம்பி நின்ற
நீதி அறிகிலள், பொன்னெடுந் திண்தோள் புணர நினைக்குமே
(3)
நினைக்கும் நிரந்தரனே என்னும், நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர்
நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர்
மனக்கின்ப வெள்ள மலைமகள் மணவாள நம்பி வண்சாந்தையூர்
தனக்கின்பன் ஆவடு தண்துறைத் தருணேந்து சேகரன் என்னுமே
(4)
தருணேந்து சேகரனே எனுந், தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப்
பொருணேர்ந்த சிந்தையவர் தொழப், புகழ்செல்வ மல்கு பொற்கோயிலுள்
அருணேர்ந்தமர் திருவாவடுதுறையாண்ட ஆண்டகை அம்மானே
தெருணேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே
(5)
திலக நுதல்உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும்
குலக அடியவர்க்கென்னை ஆட்கொடுத்தாண்டு கொண்ட குணக்கடல்
அலதொன்றறிகின்றிலேம் எனும் அணியும் வெண்ணீறஞ்செழுத்தலால்
வலதொன்றிலள் – இதற்கென் செய்கேன், வயல்அந்தண் சாந்தையர் வேந்தனே
(6)
வேந்தன் வளைத்தது மேருவில் அரவுநாண் – வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம் பொடியாட வேதப்புரவித் தேர்ச்
சாந்தைமுதல் – அயன் சாரதி கதிஅருள் என்னும் இத்தையலை
ஆந்தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே
(7)
கிற்போம் எனத் தக்கன் வேள்வி புக்கெடுத்தோடிக் கெட்டஅத் தேவர்கள்
சொற்போலும் மெய்ப்பயன் பாவிகாள் என்சொல்லிச் சொல்லும் இத்தூமொழி
கற்போல் மனங் கனிவித்த எங் கருணாலயா வந்திடாய் என்றால்
பெற்போ? பெருந் திருவாவடுதுறையாளி பேசாதொழிவதே
(8)
ஒழிவொன்றிலா உண்மை வண்ணமும், உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
மொழிவொன்றிலாப் பொன்னித் தீர்த்தமும், முனிகோடி கோடியா மூர்த்தியும்
அழிவொன்றிலாச் செல்வச் சாந்தையூர் அணிஆவடுதுறை ஆடினாள்
இழிவொன்றிலா வகைஎய்தி நின்றிறுமாக்கும் என்இளமானளே
(9)
மானேர் கலைவளையுங் கவர்ந்துளங் கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே, அமுதே, என்சித்தமே, சிவலோக நாயகச் செல்வமே
ஆனே, அலம்பு புனற்பொன்னி அணி ஆவடுதுறை அன்பர்தங்
கோனே, நின் மெய்யடியார் மனக்கருத்தை முடித்திடுங் குன்றமே
(10)
குன்றேந்தி கோகனகத்தயன் அறியா நெறி என்னைக் கூட்டினாய்
என்றேங்கி ஏங்கி அழைக்கின்றாள் இளவல்லி – எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனற்பொன்னி அணிஆவடுதுறை ஆடினாள்
நன்றே இவள்நம் பரமல்லள் நவலோக நாயகன் பாலளே
(11)
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும் என்ஆருயிர்ப் போகமாம் புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த் திருவாவடுதுறை !வேந்தனோ
டாலும் அதற்கே முதலுமாம் அறிந்தோம் அரிவை பொய்யாததே
