005 சேந்தனார் – திருவீழிமிழலை

<– 9ஆம் திருமுறை

(1)
ஏகநாயகனை, இமையவர்க்கரசை
என்னுயிர்க்கமுதினை, எதிர்இல்
போக நாயகனைப், புயல்வணற்கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநாயகனை, மிகுதிருவீழி
மிழலை விண்ணிழி செழுங்கோயில்
யோகநாயகனை அன்றி, மற்றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே

(2)
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந்தனவே

(3)
மண்டலத்தொளியை விலக்கி யான்நுகர்ந்த
மருந்தை, என் மாறிலா மணியைப்
பண்டலர் அயன் மாற்கரிதுமாய் !அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழிமிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத்தெங் குருமணியைக்
குறுக வல்வினை குறுகாவே

(4)
தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
சசிகுலா மவுலியைத், தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
எழுஞ் செழுஞ்சுடரினை, அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை, வீழி
மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக்கடிமை புக்கினிப் போக
விடுவனோ, பூண்டுகொண்டேனே

(5)
இத்தெய்வ நெறி நன்றென்றிருள் மாயப்
பிறப்பறா இந்திர சாலப்
பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
புராண சிந்தாமணி வைத்த
மெய்த்தெய்வ நெறி நான்மறையவர் வீழி
மிழலை விண்ணிழி செழுங்கோயில்
அத்தெய்வ நெறியிற் சிவமலா தவமும்
அறிவரோ அறிவுடையோரே

(6)
அக்கனா அனைய செல்வமே !சிந்தித்
தைவரோடழுந்தியான் அவமே
புக்கிடா வண்ணங் காத்தெனை ஆண்ட
புனிதனை, வனிதை பாகனை, எண்
திக்கெலாங் குலவும் புகழ்த் திருவீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கு நிற்பவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந்தடிமை பூண்டேனே

(7)
கங்கைநீர் அரிசிற்கரை இருமருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கள்நேர் தீண்ட, நீண்ட மாளிகைசூழ்
மாடநீடுயர் திருவீழித்
தங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி
நம்பியைத், தன்பெருஞ்சோதி
மங்கைஓர் பங்கத்தென் அருமருந்தை
வருந்திநான் மறப்பனோ இனியே

(8)
ஆயிரங் கமலம் ஞாயிறாயிர !முக்
கண்முக கரசரணத்தோன்
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
படர்சடை மின்னுபொன் முடியோன்
வேயிருந்தோளி உமை மணவாளன்
விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந்தேயும் போற்றுவார் கழல்கள்
போற்றுவார் புரந்தராதிகளே

(9)
எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்
எண்ணில்பல் கோடி திண்தோள்கள்
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப்பாலாய்
நின்(று) ஐஞ்ஞூற்றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடையாரே

(10)
தக்கன் வெங்கதிரோன் சலந்தரன் பிரமன்
சந்திரன் இந்திரன் எச்சன்
மிக்க நெஞ்சரக்கன் புரம் – கரி – கருடன்
மறலி – வேள் – இவர் மிகை செகுத்தோன்
திக்கெலாம் நிறைந்த புகழ்த் திருவீழி
மிழலையான் திருவடி நிழற்கீழ்ப்
புக்கிருந்தவர்தம் பொன்னடிக் கமலப்
பொடியணிந்தடிமை பூண்டேனே

(11)
உளங்கொள மதுரக் கதிர் விரித்துயிர்மேல்
அருள்சொரி தரும் உமாபதியை
வளங்கிளர் நதியும் மதியமுஞ் சூடி
மழவிடை மேல் வருவானை
விளங்கொளி வீழிமிழலை வேந்தே !என்
றாந்தனைச் சேந்தன் தாதையை யான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனக கற்பகமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page