003 திருமாளிகைத் தேவர் – கோயில் – ‘உறவாகிய யோகம்’

<– 9ஆம் திருமுறை

(1)
உறவாகிய யோகமும் போகமுமாய்
உயிராளீ என்னும், என் பொன்ஒருநாள்
சிறவாதவர் புரஞ்செற்ற கொற்றச்
சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும், மணி நீரருவி
மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(2)
காடாடு பல்கணஞ் சூழக் கேழற்
கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா – மகேந்திர வெற்பா என்னும்
வினையேன் மடந்தை விம்மா வெருவும்
சேடா என்னுஞ், செல்வர்மூவாயிரர்
செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழுங்
கோடா என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(3)
கானே வருமுரண் ஏனம் எய்த
களிஆர் புளினநற் காளாய் என்னும்
வானே தடவு நெடுங் குடுமி
மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னுந், தெய்வ வாய்மொழியார்
திருவாளர் மூவாயிரவர் தெய்வக்
கோனே என்னுங், குணக் குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(4)
வெறியேறு பன்றிப்பின் சென்றொருநாள்
விசயற்கருள் செய்த வேந்தே என்னும்
மறியேறு சாரல் மகேந்திரமா
மலைமேல் இருந்த மருந்தே என்னும்
நெறியே என்னும், நெறிநின்றவர்கள்
நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்
குறியே என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(5)
செழுந் தென்றல் அன்றில் இத்திங்கள் கங்குல்
திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்தின்றென் மேற் பகையாட வாடும்
எனைநீ நலிவதென் என்னே என்னும்
அழுந்தா மகேந்திரத்தந்தரப் !புட்
கரசுக்கரசே – அமரர்தனிக்
கொழுந்தே என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(6)
வண்டார் குழல் உமைநங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத்தின் பின்
கண்டார் கவல வில்லாடி வேடர்
கடிநாயுடன் கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலைபல் பசுங்கண்
கொண்டாய் என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(7)
கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ்
சிலையும் கணையுங் கவணுங் !கைக்கொண்
டுடுப்பாய தோற்செருப்புச் சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திரநாத !நாதாந்தத்
தரையா என்பார்க்கு நாதாந்த பதங்
கொடுப்பாய் என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(8)
சேவேந்து வெல் கொடியானே என்னுஞ்
சிவனே என் சேமத்துணையே என்னும்,
மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
வளர் நாயகா இங்கே வாராய் என்னும்
பூவேந்தி மூவாயிரவர் தொழப்
புகழேந்து மன்று பொலிய நின்ற
கோவே என்னுங், குணக்குன்றே என்னும்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(9)
தரவார் புனஞ்சுனைத் தாழ்அருவி,
தடங்கல்உறையும் மடங்கல் அமர்
மரவார் பொழில் எழில் வேங்கை எங்கும்
மழைசூழ் மகேந்திர மாமலைமேற்
சுரவா என்னுஞ், சுடர்நீள் முடிமால்
அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம்
குரவா என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(10)
திருநீறிடா உருத் தீண்டேன் என்னுந்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெருவே திரியும்
வருநீரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமகளுக்கருளும்
குருநீ என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

(11)
உற்றாய் என்னும், உன்னையன்றி !மற்றொன்
றுணரேன் என்னும், உணர்வுள் கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத்தும் பிதற்றிப்
பிணிதீர் வெண்ணீறிடப் பெற்றேன் என்னுஞ்
சுற்றாய சோதி மகேந்திரஞ் சூழ
மனத்திருள் வாங்கிச்சூழாத நெஞ்சில்
குற்றாய் என்னுங், குணக்குன்றே என்னுங்
குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page